சமீப காலமாக அதிமுகவில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. ஏற்கனவே கூட்டணி ஆட்சி பிரச்னை ஒருபுறம் இருக்க, தற்போது ஓபிஎஸ், செங்கோட்டையன் என, அதிமுக தலைமைக்கு பிரஷர் ஏறிக்கொண்டே போகிறது. அதிலும் தற்போது செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு வந்திருப்பது, பரபரப்பை மேலும் கூட்டியுள்ளது. அவர் பேட்டியில் என்ன சொன்னார் என்பதை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

“இன்றைய அரசியல் சூழல் குறித்து அமித் ஷா, நிர்மலாவிடம் பேசினேன்“

டெல்லி சென்று திரும்பிய நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்ச செங்கோட்டையன், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.

அவர்களிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்து பேசியதாகவும், அதிமுகவில் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, அனைவரும் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தன்னுடைய கருத்துக்களை அவர்களிடம் எடுத்துக் கூறியதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Continues below advertisement

மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் தொடர்பாக கோரிக்கைகளை வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க முயற்சித்துவரும் செங்கோட்டையன்

எடப்பாடி பழனிசாமியின் மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், கடந்த 5-ம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து, கட்சியில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்க  வலியுறுத்தி, சில மாதங்களுக்கு முன்னர் தனது தலைமையில் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சிவி. சண்முகம் ஆகிய 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியதாக தெரிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திலும், மனநிலையிலும் இல்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்த நிலையில், அப்படி யாரும் என்னை சந்திக்கவில்லை, எதுவும் வலியுறுத்தவில்லையென்று எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார். ஆனால், அது  உண்மைதான் என்பதை செங்கோட்டையன் போட்டு உடைத்தார். மேலும், அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என்றால், பிரிந்து சென்ற அனைவரும் கட்சியில் சேர்க்கப்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தினார்.

தற்போது நிலவும் சூழலில், வரும் 2026 தேர்தலில் அதிமுகவால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது என்றும், பிரிந்து சென்ற அனைவரும், அதாவது, சசிகலா, தினகரன், ஒபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இணைத்து களம் கண்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதையும் செங்கோட்டையன் உறுதியாக தெரிவித்தார். 

அதோடு, பிரிந்து சென்றவர்களை கட்சியில் மீண்டும் இணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்தார். அப்படி செய்யவில்லை என்றால், கட்சி ஒன்றிணைய வேண்டும் என்ற மனநிலை கொண்ட அனைவரும் ஒன்றுசேர்ந்து, பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் பணிகளை செய்து முடிப்போம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் சவால் விடுத்தார்.

இந்த பேட்டிக்கு அடுத்த நாளே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் டெல்லி சென்று அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிவிட்டு வந்திருப்பது, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.