தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தீவிரமாக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக ஆட்சியைத் தக்கவைக்க தீவிர பணியாற்றி வரும் சூழலில், எதிர்க்கட்சியான அதிமுக-வும் ஆட்சியைப் பிடிக்க பணியாற்றி வருகிறது.
எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன்:
சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என பலத்த போட்டிக்கு மத்தியில் அதிமுக-வை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேரிடியாக இறங்கியிருக்கிறார் செங்கோட்டையன். கடந்த சில மாதங்களுக்கு முன்பே எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே முட்டல் - மோதல் இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது.
அதிமுக-வின் நலன் கருதி பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும், தேர்தலில் வெற்றி பெற சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கு தேவை என்றும் கூறியதுடன், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவையும் செங்கோட்டையன் விதித்தார். பொதுவெளியில் செங்கோட்டையன் விதித்த இந்த கெடு எடப்பாடி பழனிசாமியை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
நெருக்கடி தரும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள்:
செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்துமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், செங்கோட்டையன் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுக-வில் இருப்பவர். சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவிற்கே சீனியர்.
அனைத்தையும் விட எடப்பாடி பழனிசாமியை அதிமுக-வில் சேர்த்துவிட்டவரே செங்கோட்டையன்தான் ஆவார். ஓ.பன்னீர்செல்வத்துடனான மோதல் போக்கிற்கு பிறகு சசிகலாவால் முதலமைச்சராக செங்கோட்டையனே தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுபோன்று மிகப்பெரிய அனுபவம் கொண்ட செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. செங்கோட்டையனையும், அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ள நிலையில், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சுமார் 1000 பேர் தங்களையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
பலவீனமாக மாறுகிறதா கொங்கு?
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வின் பலமிகுந்த பகுதியாக இருப்பது கொங்கு மண்டலம். அதற்கு காரணம் கொங்குவைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர், தங்கமணி, எஸ்பி வேலுமணி, செங்கோட்டையன் அமைச்சர்கள் என கொங்கு மண்டலம் இபிஎஸ் ஆட்சியில் அதிகாரமிக்க இடமாக இருந்து வருகிறது. கடந்த தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சியாக அமர்வதற்கும் கொங்கு மண்டலம் முக்கிய பங்காற்றி வருகிறது.
இதற்கு மற்றொரு காரணம் கவுண்டர் சமுதாய வாக்குகள் ஒரு சேர இவர்களுக்கு கிடைத்ததும் ஆகும். ஆனால், தற்போது மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் சிக்கலை அதிமுக-விற்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தேர்தல் களத்திலும் நீடித்தால் பலமான கொங்கு மண்டலமே அதிமுகவிற்கு பலவீனமாக மாறும் அபாயம் உண்டாகியுள்ளது.
என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்?
ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி வைத்தது பலருக்கும் விருப்பமில்லாத ஒன்றாக உள்ளது. தற்போது அதிமுக-வில் அரங்கேறும் உட்கட்சி சண்டை இதை இன்னும் பெரிதாக்கி வருகிறது.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் எடப்பாடி தான் எதிர்கொண்டுள்ள சிக்கலை எப்படி சமாளிக்கப்போகிறார்? செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்பாரா? அல்லது செங்கோட்டையனை தனது முடிவை ஏற்றுக்கொள்ள வைப்பாரா? என்ற அரசியல் சதுரங்கம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் என்றே கூறலாம்.