அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி சைக்கிள் கொடுத்தோம், ஆனால் திமுக அரசு மாணவர்களுக்கு கஞ்சா பீர், சப்ளை செய்கிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சாதுமிரண்டால் காடு கொள்ளாது
மதுரை விளாங்குடி பகுதியில் எம்.ஜி.ஆர் மன்றம் மற்றும் அதிமுக கொடியேற்றி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அ.தி.மு.க., கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “நாட்டில் சட்டம் ஒழுங்கு கேவலமாக உள்ளது. தபால் தந்தி நகரில் நடைபயிற்சி சென்ற பெண்ணை ஒருவர் தடவி விட்டு செல்கிறார். ஆசிரியர் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது பள்ளிக்குள் சென்று வெட்டுகிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த திமுக அரசாங்கத்தை ஆட்சி நிர்வாகம் சரியில்லை என பலமுறை தலையில் கொட்டுகிறது. காவல்துறைக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் எதுவும் இல்லை. மதுரையில் சித்திரை திருவிழாவில் மக்களுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை. காவல்துறை எங்களை அடக்க நினைப்பது என்ன நியாயம், சாதுமிரண்டால் காடு கொள்ளாது. நாங்கள் கண்ணியமிக்கவர்கள். எங்கள் ஆட்சிக் காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது.
மிட்டாய் வடிவில் போதை மாத்திரைகள்
தற்போது தமிழகத்தில் கள்ளச்சாராயம் தலை விரித்து ஆடுகிறது, மெத்தனால் பல மாநிலங்களில் இருந்து வருகிறது. கள்ளச்சாராய சாவு வழக்கை நீதிமன்றமே சிபிஐ வசம் ஒப்படைத்துவிட்டது. அந்த அளவிற்கு தமிழக காவல்துறை மோசமாக செயல்படுகின்றனர். தற்போது தமிழகத்தில் மிட்டாய் வடிவில் போதை மாத்திரைகள் தமிழகத்தில் விற்கப்படுகிறது. கூல் லிப் பயன்பாடு அதிகம் உள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல் இல்லை, உண்மையான விடியல் வேண்டும் என்றால் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஆர்.எஸ்.பாரதி அவர்களே, எங்கள் ஆட்சியில் கள்ளச்சாராயம் சாப்பிட்டு இறந்து போனார்களா? சும்மா ஊது குழலாக இருக்கக்கூடாது. ஒரு கொம்பனும் இந்த ஆட்சியை குறை சொல்ல முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார், மாண்புமிகு நீதியரசர் சொல்லிவிட்டாரே?
ஒரு நடிகையைப் பிடிக்க இவ்வளவு அவசரம் தேவையில்லை
திரைப்பட நடிகை கஸ்தூரி, மகனுக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளது. எல்லாரும் பேசியது போல் அவரும் பேசியியுள்ளார். கஸ்தூரிக்கு நான் ஆதரவாக பேசவில்லை. ஆனால் நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை அமைத்து பிடித்துள்ளனர். ஒரு நடிகையைப் பிடிக்க இவ்வளவு அவசரம் தேவையில்லை. தமிழக காவல்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை ஒரு வருடத்திற்கு மேலாகியும் பிடிக்க முடியவில்லை. இந்த திமுக அரசை மாற்ற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். வருகின்ற தேர்தலில் திமுகவை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். திமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சியையும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். விஜய் கட்சி ஆரம்பிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி என்று நானே பலமுறை சொல்லியுள்ளேன். தமிழ்நாட்டில் ஒரு இளைஞன் புரட்சித்தலைவர் செய்தது போல ஒரு சில காரியங்கள் செய்துள்ளார். இப்ப உள்ள நடிகர்களில் இல்லாத குணம் விஜய் இடம் இருக்கிறது நாங்களே பேசி உள்ளோம். முதலமைச்சரிடம் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது. திருமாவளவனுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு இணக்கம் உள்ளது. திருமாவளவன் போர்க்குணம் மிக்கவர். சமீபகாலமாக திமுகவின் அழுத்தத்தின் காரணமாக தவறாக பேசிவருகிறார். திருமாவளவனை மிரட்டவ உருட்டவோ முடியாது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளார்கள். அவர்களை அரவணைத்து ஓட்டு சாவடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எடப்பாடி சொல்லி இருக்கிறார்” என்றார்.