சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற திடமான எண்ணத்தில் இருந்த திமுகவிற்கு கிடைத்த தோல்வி, அந்த கட்சியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியை மறு கட்டமைப்பு செய்யும் அளவிற்கு அந்த தோல்வி திமுகவை அதிர்ச்சியடைவைத்திருக்கிறது. அதனடிப்படையிலேயே தேர்தல் தோல்வி குறித்து ஆராய, தனித் தனியாக குழுக்களை அமைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அவர்களும் கட்டுக் கட்டாக, பெட்டி, பெட்டியாக ஆய்வு அறிக்கையை அவர் கைகளில் எழுதிக் கொடுத்திருக்கின்றனர்.

ஆட்டம் போட்டவர்களால் ஆட்டம் கண்ட திமுக

இந்நிலையில் கட்சியில் ஆட்டம் போட்ட பலரை அடங்கியிருக்க உத்தரவு போட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அதில் முக்கியமானவர் சேகர்பாபு.  தன்னை சென்னையின் முடிசூடா மன்னராக நினைத்துக்கொண்டு அவர் திமுகவில் செயல்பட்ட விதம் பல நிர்வாகிகளை அதிருப்தியடைய வைத்திருக்கிறது. மு.க.ஸ்டாலினின் வலதுகரமாக அவர் செயல்படத் தொடங்கியதால், சேகர்பாபு மீதான குறைகளை கூட ஸ்டாலிண்டம் சென்று சொல்ல, பல நிர்வாகிகள் கடந்த காலங்களில் தயங்கி நின்றனர். ஆனால், தேர்தல் தோல்வி அவர்களுக்கு புது தைரியத்தை கொடுத்திருக்கிறது. அதனால் பாபு மீதான அடுக்கடுக்கான புகார்களையும் முகம்சுளிக்கும் வகையில் அவர் கட்சிக்காரர்களிடமும் மக்களிடமும் நடந்துகொண்ட விதம் குறித்தும் ஆதாரப்பூர்வமாக மு.க.ஸ்டாலினுக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றனர்.

சேகர்பாபு-வின் நடவடிக்கைகளை எடுத்துச் சொன்ன பரந்தாமன்

அதில் முக்கியமான நபர், எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த பரந்தாமன். தன்னுடைய தொகுதியில் நடைபெறும் திட்டங்கள் குறித்தும் தன்னுடைய தொகுதியின் நிகழ்ச்சிகள் பற்றியும் கூட தொகுதி எம்.எல்.ஏவான தனக்கு தெரிவிக்காமல், சர்வதிகாரமாக செயல்பட்ட சேகர்பாபு குறித்து அப்போதே இளைஞரணி செயலாளர் உதயநிதியிடம் கம்ப்ளைண்ட் செய்தார் பரந்தாமன். ஆனால், அந்த நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அசைக்க முடியாத தளபதியாக, கொளத்தூர் தொகுதியில் பொறுப்பாளராக சேகர்பாபு இருந்ததால், உதயநிதியால் கூட சேகர்பாபுவின் ஆட்டத்தை அடக்க முடியவில்லை. தமிழ்நாட்டிலேயே கொளத்தூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார் நம்பவைத்திருந்தவரும் அவர்தான். ஆனால், தேர்தல் முடிவு சொன்னது வேறு. தன்னுடைய இரண்டாவது வீடு மாதிரி கொளத்தூருக்கு வாரத்திற்கு இரண்டு முறை விசிட் அடித்தும், பல்வேறு திட்டங்களை செய்துக்கொடுத்தும், மு.க.ஸ்டாலினை அந்த தொகுதி மக்கள் தோற்கடித்தார்கள். அதற்கு முழுக் காரணம் சேகர்பாபுவின் நடவடிக்கை மட்டும்தான் என ஏகத்துக்கு அவர் மீது சென்று புகார்கள் விழுந்தன.

ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு – முக்கியத்துவம் பெறும் பரந்தாமன்

இதனால், மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி அவரின் குடும்பத்தினரும் சேகர்பாபு மீது கடுமையான கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், சென்னையில் திமுக தோல்வியை தழுவ சேகர்பாபுதான் காரணம் என பகிரங்கமாக பேசத் தொடங்கி, திமுக தலைமைக்கும் தன்னுடைய கருத்துகளை ஆதாரப்பூர்வமாக எடுத்து கூறியிருக்கிறார் பரந்தாமன். இதனையடுத்து, கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் இருந்து சேகர்பாபுவை மெல்ல விலக்கி வைத்திருக்கிறது திமுக தலைமை.

அதே நேரத்தில், எழும்பூர் தொகுதியில் போட்டியிட சேகர்பாபுவை தாண்டி மீண்டும் சீட் கூட பெற முடியாமல் இருந்த பரந்தமானுக்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. அதுவும் கட்சியை மறுக்கட்டமைப்பு செய்யும் முக்கியமான குழுவில் அவரை உறுப்பினராக நியமித்திருக்கிறார் திமுக தலைமை மு.க.ஸ்டாலின்.

அதே நேரத்தில், அறிவாலயத்தில் அமர்ந்து செய்தியாளர்களை சந்திக்கும் மிக முக்கிய அந்தஸ்தும் இன்று பரந்தமானுக்கு கிடைத்திருக்கிறது. தவெக நடத்தி வரும் எம்.எல்.ஏக்கள் மீதான குதிரை பேரம் பற்றியும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்தும் பேசும் அளவுக்கு அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கூடியிருக்கிறது.

கட்சியினர் உற்சாகம்

இதனையடுத்து, கட்சியில் உழைப்பவர்கள், கொள்கை பற்று கொண்டவர்கள், விவரம் அறிந்தவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கிய பணிகளை பிரித்துக்கொடுக்க திமுக தலைமை முடிவு எடுத்திருக்கிறது. இதனால், கட்சியில் சீனியர்களை கடந்து அங்கீகாரம் கிடைக்குமா? என்று ஏங்கிக்கொண்டிருந்த திமுக உடன்பிறப்புகள் உற்சாகம் அடைந்து, மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான பணிகளை இப்போதே தொடங்கியிருக்கின்றனர்.