Senthil balaji: கோவையில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் உட்படம்  சுமார் 200 பேர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.


விலகும் நாதக நிர்வாகிகள்:


தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு நாங்கள் தான் மாற்று என,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து முழங்கி வருகிறார். கடந்து 10 வருடங்களாக தொடர்ந்து களமாடி வரும் அவர் பின்னால், பெரும் இளைஞர் கூட்டமும் திரண்டு வந்தது. ஆனால், சமீப காலமாக சீமானின் நடவடிக்கைகள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி நாதக நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் பலரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்வதோடு, நிர்வாகிகளின் கருத்துக்கு சீமான் மதிப்பளிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். அண்மையில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் கூட கட்சியில் இருந்து விலகினார்.



ஸ்லீப்பர் செல்ஸ் - சீமான் விளக்கம்


தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல்லாக உள்ளனர். அவர்கள் கட்சியில் இருந்து விலகவில்லை. நான் தான் அவர்களை மற்ற கட்சிகளுக்கு உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைத்துள்ளேன். அவர்கள் அங்குசேர்ந்து உளவு பார்த்து, அதன் பின் மீண்டும் எங்கள் கட்சிக்கு திரும்புவார்கள்” என தெரிவித்தார்.


திமுகவில் இணைந்த நாதக நிர்வாகிகள்:


இந்நிலையில் தான், நாதகவில் இருந்து விலகிய கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும், அக்கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை சால்வை அணிவித்து அமைச்சர் திமுகவிற்கு வரவேற்பு, சேர்ந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.






"செந்தில் பாலாஜி இழைத்த தூரோகம்"


நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள் ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டு உளவு பார்த்துவிட்டு, மீண்டும் தனது கட்சியில் இணைவார்கள் என சீமான் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். அப்படி இருந்து, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்துள்ளார். இது பச்சை துரோகம் தானே, இதன் மூலம் சீமான் உடன் செந்தில் பாலாஜி கைகோர்த்துவிட்டார என உடன்பிறப்புகள் நகைச்சுவையாக அமைச்சரை கிண்டலடித்து வருகின்றனர். மேலும், கட்சியில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகுவதை சமாளிக்கவே, அவர்களை ஸ்லீப்பர் செல்கள் என சீமான் மழுப்புவதாகவும் விமர்சிக்கின்றனர். இதனிடையே, தான் தொடர்ந்து விமர்சித்து வந்த ரஜினியை நேரில் சென்று சீமான் சந்தித்ததும், அதிகரித்து வரும் எதிர்மறை விமர்சனங்களை கட்டுப்படுத்தவே எனவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.