எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்ல தயாராக இல்லை என்று, ஆதவ் அர்ஜுனா பேசிய வீடியோ தற்போது பரவி வரும் நிலையில், ஆதவ் குறித்த ஒரு முக்கிய தகவலை சீமான் வெளியிட்டுள்ளார். அது என்ன என்று பார்க்கலாமா.?

அதிமுக-தவெக-நாதக-வை இணைக்க முயன்ற ஆதவ் அர்ஜுனா

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் விசிக-விலிருந்து விலகிய நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் ஆதவ் அர்ஜுனா. இதையடுத்து, அவருக்கு உடனடியாக தவெகவின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனால் உற்சாகமடைந்த ஆதவ், தவெக, அதிமுக உடன் எப்படியாவது  கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்று பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், இரு கட்சியின் தலைவர்களுக்கும் இடையே கன்டிஷன்கள் ஒத்து வராததால், கூட்டணி அமைக்கும் ஆதவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனிடையே, நாம் தமிழர் கட்சியையும் அதிமுக கூட்டணியில் இணைக்க முயன்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா, ஆனால் அவரது அந்த முயற்சியும் கைகூடவில்லை. அதன் பிறகு தவெக பரபரப்பாகிவிட, அங்கு வேலைகளை கவணிக்க ஆரம்பித்து விட்டார்.

அதிமுக-வை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா

இப்படிப்பட்ட சூழலில், தவெகவில் தேர்தலை நோக்கிய பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆதவ் அர்ஜுனா, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம், அதிமுக குறித்து கிண்டலாக பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், எடப்பாடி பழனிசாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வரத் தயாராக இல்லை என்று அவர் பேசியதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

மேலும், அண்ணாமலையாவது 10 பேரை கூட வைத்துக்கொண்டு, தேர்தலில் நின்று 18 சதவீத ஓட்டு வாங்கினார் என்றும், ஆனால் எடப்பாடி பழனிசாமியை நம்பி எவனும் கூட்டணிக்கு வர மாதிரி தெரியவில்லை என்றும் ஆதவ் அர்ஜூனா பேசியதாக அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்த சீமான் கூறியது என்ன.?

இந்த நிலையில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "புறணி பேசுவதற்கெல்லாம் நாங்கள் கருத்து சொல்ல முடியுமா? இதே ஆதவ் அர்ஜுனா தான், அதிமுக கூட்டணிக்கு வந்தால் என்னை துணை முதலமைச்சர் ஆக்குகிறேன் என்று கூறினார், அதற்கு என்ன செய்வது?" என சிரித்தபடி ஒரே போடாக போட்டுள்ளார்.