தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேடுதல் முடிவடைந்தது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 79% மக்கள் தங்களது வாக்களித்துள்ளனர். எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி தேர்தல் முடிவடைந்தது.
சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள 35 பதவிகளுக்கான தேர்தல் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சேலம் மாவட்டத்தில் காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு பதிவானது காலை 9 மணி நிலவரப்படி 16% வாக்குகள் பதிவானது. இதையடுத்து காலை 11 மணி நிலவரப்படி 35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மதியம் 01 மணி நிலவரப்படி 53% வாக்குகள் பதிவானது. மதியம் 3 மணி நிலவரப்படி 66% வாக்குகள் பதிவாகி வருகிறது. இறுதியாக சேலம் மாவட்டத்தில் 79% வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் ஆண்கள் -49,947 , பெண்கள் -47,680 இதரர் -2 என மொத்தம் 97,629 வாக்குகள் பதிவானது.
06.10.2021 அன்று தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கான முதலாம் கட்ட தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. தற்போது காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு இடைத்தேர்தல் இன்று நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் 23 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 35 பதவிகள் காலியாக உள்ளது. இவற்றில் 11 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 24 பதவிகளுக்கு மட்டும் இன்று (09.10.2021) தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இத் தேர்தலில் மொத்தம் 1,22,857 பேர் வாக்காளர்கள். இவர்களுக்கான 195 வாக்குச் சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றில் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டன.
அதன்படி, ஓமலூரில் 18 வாக்குச்சாவடியில், எடப்பாடியில் 10 வாக்குச்சாவடிகள், பனமரத்துப்பட்டி யில் 8 வாக்குச்சாவடியில், அயோத்தியா பட்டினத்தில் 7 வாக்குச் சாவடிக்கும், நங்கவள்ளி யில் 5 வாக்குச்சாவடியில், தாரமங்கலத்தில் 4 வாக்குச் சாவடியிலும், மேச்சேரியில் 3 வாக்குச் சாவடியும், வீரபாண்டி, தலைவாசல், வாழப்பாடியில் தலா ஒரு வாக்குச்சாவடியும் என மொத்தம் 58 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப் பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிகளில் 29 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, 29 வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பனமரத்துப்பட்டி, ஓமலூர், எடப்பாடி போன்ற பகுதிகளில் அவ்வப்போது சிறு சலசலப்பு, வாக்குவாதம் ஏற்பட்டது அதனை காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் முடிந்தவுடன் பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி எடுத்துச் செல்லப்பட்டது. வரும் 12ஆம் தேதி அதே இடத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.