RSS BJP PM Modi: பிரதமர் மோடியின் அதிகாரங்களை குறைக்க அவருக்க் ஆதரவான நபர்களை வெளியேற்ற ஆர்எஸ்எஸ் தலைமை முடிவு செய்துள்ளதாம்.
முட்டலும்.. மோதலும்..
கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி 10 ஆண்டுகள் மோடி பிரதமராக இருந்தபோது, அவர் மிகவும் சுந்தந்திரமான தலைவராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தனிப்பெரும்பான்மையை இழந்து, கூட்டணி கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது முதலே பாஜக தலைமையிலான அரசில் ஆர்எஸ்எஸ் தலையீடு அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அமைப்பை பொறுத்தவரை தனிநபரை காட்டிலும் கட்சியே மிகப்பெரியதாக கருதப்படுகிறது. ஆனால், மோடி பிரதமரான பிறகு ஒட்டுமொத்த பாஜகவுமே அவரை நம்பியே இருப்பதை போன்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்எஸ்எஸ் சற்றும் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதன் விளைவாகவே 75 வயதை எட்டிவிட்டால் யாராயினும், பதவிகளை துறந்து அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என, மோகன் பகவத் மீண்டும் மீண்டும் பிரதமர் மோடிக்கு மறைமுக வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.
”பிரதமரை தனிமரமாக்க முடிவு”
அதேநேரம், தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு மோடி வேண்டுமானால், பிரதமர் பதவியில் தொடரட்டும். ஆனால், அவரது அதிகாரம் என்பது மட்டுப்படுத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆட்சியிலும் கட்சியிலும் அதிகாரமிக்க பதவிகளில் மோடியின் ஆதரவாளர்களை நீக்கவும், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மிகவும் தீவிரமாக பின்பற்றுபவர்களையும் நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம், மோடி பிரதமராக மட்டுமே நீடிக்க மற்ற அனைத்து அதிகாரங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆர்எஸ்எஸ் அமைப்பு நினைக்கிறதாம்.
சைலண்ட் மோடில் அமைச்சர்கள்:
மோடியின் பலத்தை குறைப்பதற்காக தங்களது பதவிகள் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தான் பல அமைச்சர்கள் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டனராம். தற்போது நிலவி வரும் தேர்தல் ஆணையம் மீதான வாக்கு திருட்டு புகாரில் கூட, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் தீவிரமாக காங்கிரசுக்கு எதிராக களமாடி வந்தனர். ஆனால், திடீரென அவர்கள் இந்த விவகாரம் குறித்து பேசுவதை நிறுத்தியுள்ளனர். ஏற்கனவே ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள் அண்மைக்காலமாக அரசியல் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் கவனித்தக்கது. இதில் ஆர்எஸ்எஸ் பங்களிப்பு இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
பாஜக தலைவர் யார்?
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இடையே நிலவும் மோதலின் மற்றொரு வெளிப்பாடாக தான், நட்டாவின் பதவிக்காலம் முடிந்தும் புதிய தலைவர் தற்போது வரை தேர்தெடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. நட்டா பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டாலுமே, அமித் ஷா தான் உண்மையில் தலைவராக செயல்பட்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அடுத் தலைவராகவும் தங்களது இசைவுக்கு ஏற்ப செயல்படும் நபரையே நியமிக்க மோடி - அமித் ஷா கூட்டணி விரும்புகிறதாம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்போ தங்களது கொள்கைகளை முதன்மையாக கொண்டு தீவிரமாக செயல்படும் நபரையே தலைவராக நியமிக்க தீவிரம் காட்டி வருகிறதாம். இதனால் தான், பாஜகவிற்கான புதிய தேசிய தலைவரை நியமிப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறதாம்.