Rahul Gandhi: இந்தியாவில் கடந்த ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மோசடி நடைபெறாவிட்டால், மோடிக்கு பிரதமர் பதவியே கிடைத்து இருக்காது என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு:
தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை அடிப்படை ஆதாரமற்றவை என, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து இருந்தது. இதுதொடர்பாக பேசுகையில், “நாங்கள் கண்டுபிடித்த உண்மை ஒரு அணுகுண்டு. இந்த அணுகுண்டு வெடிக்கும்போது, நாட்டில் தேர்தல் ஆணையத்தைப் பார்க்க முடியாது" என ராகுல் காந்தி பேசினார். ஆனால், எந்தவித பாரபட்சமும் இன்றி செயல்படுவதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது. இந்நிலையில், நாட்டில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது என்றும், கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளது எனவும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
இறந்துபோன தேர்தல் முறை - ராகுல் காந்தி
டெல்லியில் நடைபெற்ற வருடாந்திர சட்ட மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஒரு மக்களவைத் தேர்தலில் எப்படி மோசடி செய்ய முடியும், எப்படி மோசடி செய்யப்பட்டது என்பதை வரும் சில நாட்களில் நாங்கள் மக்களுக்கு நிரூபிக்கப் போகிறோம். உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கனவே இறந்துவிட்டது. இந்தியப் பிரதமர் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்.15-20 இடங்கள் குறைவாக வென்றிருந்தால் அவர் இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க மாட்டார்,
தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு இப்போது இல்லை, அது இறந்துவிட்டது. இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க எங்களுக்கு 6 மாதங்கள் இடைவிடாத வேலை தேவைப்பட்டது. மக்களவைத் தேர்தல் எப்படி திருடப்படுகிறது என்பதை நீங்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் பார்ப்பீர்கள். 6.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள், அவர்களில் 1.5 லட்சம் வாக்காளர்கள் போலியானவர்கள்.
”4 மாதங்களில் ஒரு கோடி வாக்காளர்கள்”
தேர்தல் முறை பற்றி நான் சமீப காலமாக பேசி வருகிறேன். 2014 முதல் ஏதோ தவறு இருப்பதாக எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருந்தது. குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்கனவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அமோக வெற்றிகளைப் பெறும் திறன். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுகுறித்து நாங்கள் பேசும் போதெல்லாம், ஆதாரம் எங்கே? என கேள்வி எழுப்பினார்கள்.
பிறகு, மகாராஷ்டிராவில் ஏதோ நடந்தது. மக்களவை தேர்தலில் நாங்கள் அங்கு வெற்றி பெற்றோம். பின்னர் 4 மாத இடைவெளியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தோற்றது மட்டுமல்ல, அழிக்கப்பட்டோம். இதையடுத்து தேர்தல் முறைகேடுகளை நாங்கள் தீவிரமாகத் தேடத் தொடங்கினோம். மகாராஷ்டிராவில், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு இடையில் 1 கோடி புதிய வாக்காளர்கள் வந்திருப்பதைக் கண்டறிந்தோம். அந்த வாக்குகளில் பெரும்பகுதி பாஜகவுக்குச் செல்கிறது. இப்போது எங்களிடம் ஆதாரம் உள்ளது என்பதற்கு நான் எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்கிறேன்” என ராகுல் காந்தி பேசியுள்ளார். ஆனால், இதுதொடர்பான ஆதாரங்கள் அல்லது தரவுகளை தற்போது வரை ராகுல் காந்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.