எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசி, அவர்களை விலைக்கு வாங்கி தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று முதன்முறையாக இந்த சதித் திட்டத்திற்கு வழங்கப்பட்ட பெயரை வெளியிட்டிருக்கிறது சென்னை காவல்துறை. அதில், இந்த சதித் திட்டம் ‘மேகாலயா பிராஜக்ட்’ என்ற பெயரில் நடைபெற்றுள்ளதாக கூறியிருக்கும் காவல்துறை, இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியிருக்கிறது.
ஆபரேஷன் மேகலாயா என்றால் என்ன ?
தமிழ்நாட்டில் உள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்த நிலையில், அந்த சதித்திட்டத்திற்கு ஆபரேஷன் தமிழ்நாடு, ஆபரேஷன் தவெக அல்லது ஆபரேஷன் விஜய் இப்படிதானே பெயரை சூட்டி சதிச் செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும்? அதற்கு மாறாக வேறு ஒரு மாநில பெயரான மேகலாயா பெயரில் ’ஆபரேஷன் மேகாலாயா’ என குறிப்பிட்டு ஏன் இந்த சதிச் செயல் நடைபெற்றது என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் பேசியபோது அதற்கான அர்த்தம் தெரிந்தது.
மேகாலாயா மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் பல மாற்றங்கள் நடந்திருக்கிறது. குறிப்பாக, ஆட்சி அமைக்கும் என்று நினைத்த கட்சி, ஆட்சியை கோட்டை விட்ட கதைகளும், மெஜாரிட்டி எண்ணிக்கைகளை பெறாதா கட்சி, ஆட்சியை பிடித்த வரலாறும் அங்கு நடைபெற்றிருக்கிறது. குறிப்பாக, கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மற்ற கட்சிகளை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தபோதும் கூட, சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி விரைவாக மற்ற சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை பிடித்தது. இதுபோன்ற பல அரசியல் மாற்றங்கள் அங்கு நிகழ்ந்திருக்கின்றன. அதன் காரணமாகவே இந்த பெயரை சதி செய்தவர்கள் சூட்டி, தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்பட்டுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சித்துள்ளனர்.
நீளும் பட்டியல்
15 எம்.எல்.ஏக்கள் வரை பேரம் பேசிய வழக்கில் இன்னும் பலருக்கு தொடர்பு இருப்பதாலும் இதற்கு மூளையாக செயல்பட்டவர்களில் முக்கியமான நபர் வெளிநாட்டில் இருப்பதாலும் அவர்களையெல்லாம் பிடிப்பதற்கான முயற்சிகளிலும் சென்னை காவல்துறை ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஐடிபிஎஸ் திருநாவுக்கரசுடன், சதித்திட்டம் நிகழ்திய நாட்களில் அதிக நேரம் பேசியவர்கள், அவரிடம் இந்த விவகாரம் குறித்து வாட்ஸ்-அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் உரையாடிவர்கள் என என பட்டியல் நீண்டு வருவது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அடுத்தடுத்து சம்மன்
விரைவில் இன்னும் பலருக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை உத்தரவிடவிருக்கிறது. இதனால், IPDS திருநாவுக்கரசுடன் சதித் திட்டம் தீட்டப்பட்ட நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் பலர் பீதியடைந்துள்ளனர்.
