நெல்லை தச்சநல்லூர் அடுத்த அனந்தபுரம் பகுதியில் புதிதாக சமுதாய நலக்கூடம் அமைப்பதற்காக  நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின் பொதுமக்களுடன் ஒன்றிணைந்து பூமி பூஜை செய்யப்பட்டது.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை சட்டமன்ற உறுப்பினரும், பாஜக சட்டமன்ற குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் கூறும் பொழுது, "பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 30 லட்சம் மதிப்பீட்டில் அனந்தபுரம் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் பரவலாக அதிக திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விவசாயிகள் தான் இருக்கின்றனர். வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில நபர்களுக்கும், சில மாவட்டங்களுக்கும் மட்டுமே திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.  எல்லா திட்டங்களும் நல்ல திட்டங்கள் தான், ஆனால் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பொதுவாக தென் மாவட்டங்களை பொறுத்தவரை குமரி மாவட்டத்தை நாஞ்சில் நாடு என்று சொல்வர்.  திருநெல்வேலி, தூத்துக்குடியில் வற்றாத ஜீவ நதியின் மூலம் நஞ்சை பயிர் விளைய கூடிய பகுதி. இந்த பகுதியில் இருந்த நெல் ஆராய்ச்சி மையம் இப்போது இல்லாமல் இருப்பது வருத்தத்திற்குரியது. இது குறித்து சட்டமன்றத்தில் கண்டிப்பாக கேள்வி எழுப்புவேன். 


போதிய மழை இல்லாததால் நெல்லை மாவட்டம் வறட்சியாக உள்ளது. அதனை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் இதுவரை செயல்படுத்தப்படாமல் உள்ளது போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப இருக்கிறோம்.  தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று. தற்போது வரை அதிமுக உடனான கூட்டணியில் தான் இருக்கிறோம். அகில இந்திய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சி. உலக அளவில் அதிக எம்எல்ஏக்கள், எம்பிக்களை கொண்ட கட்சி பாரதிய ஜனதா கட்சி. அதிமுக - பாஜக தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கீழ் மட்டத்தில் ஒன்று, இரண்டு பேர் அங்கொன்று இங்கொன்றுமாக சில பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். அது இருக்கத்தான் செய்யும். அது கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தார். அதிமுக - பாஜக இரண்டு கட்சிகளுமே கொள்கை அடிப்படையில் உள்ள கட்சிகள்.  தேர்தல் அறிவிக்கும் போது பிரச்சனைகள் இருக்கலாம். தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவித்த பிறகு ஒன்றுபட்டு வேலை பார்ப்பதில் எந்த கருத்து மனமாச்சியமும் நிச்சயமாக இருக்காது" என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடரன்


யூடியூபில் வீடியோக்களை காண