தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத காலமே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் திட்டம் வகுத்து செயல்படுகிறது. கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணியோடு வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையால் இதுவரை எந்த வித தொகுதி பங்கீடு குழுவையும் திமுக அமைக்கவும் இல்லை, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தவும் இல்லை. 

Continues below advertisement

பலமாகும் அதிமுக கூட்டணி

அதேநேரம் திமுகவை வீழ்த்தும் வகையில் அதிமுக தேர்தல் ரேஸில் முதல் ஆளாக உள்ளது. பாஜகவை தங்கள் அணியில் இணைத்துள்ளது. அடுத்ததாக பாமக, அமமுக ஆகிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்த்துள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளோடு பேசி தொகுதிகளின் எண்ணிக்கையையும் முடிவு செய்துள்ளது. அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலையும் முடித்துள்ளது. இது மட்டுமில்லாமல் இரண்டு கட்டமாக 10 அசத்தலான தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவித்து தமிழக மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

தமிழகத்தை குறிவைக்கும் பாஜக

இந்த நிலையில் அதிமுகவிற்கு துணை நிற்கும் வகையிலும், எப்படியாவது தமிழகத்தில் திமுகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜக களம் இறங்கியுள்ளது. இதற்காக தமிழகத்தை நோக்கி பாஜக மூத்த தலைவர்கள் மட்டுமில்லாமல் பாஜக மத்திய அமைச்சர்களும் படையெடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் முதல் ரவுண்டில் கடந்த மாதம் மோடி, நிதின் நபின்,பியூஸ் கோயல் மற்றும் அமித்ஷா கலந்து கொண்ட கூட்டமானது நடைபெற்றது.இந்த கூட்டத்தால் பாஜக நிர்வாகிகள் மட்டுமில்லாமல் அதிமுகவினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இரு தரப்பும் தனித்தனியாக தேர்தலை எதிர்கொண்ட நிலையில், தற்போது ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

தமிழகத்தில் பாஜக தலைவர்கள்

அடுத்ததாக வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் புதுவை வரவுள்ளார். அப்போது பாஜக சார்பாக நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதே போல வருகிற 28ஆம் தேதி மதுரையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு நடைபெற்று வந்தது. ஆனால் பிரதமர் வருகை ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அப்போது பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.