தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்கு ஒரு எம்.பி சீட்டை அதிமுக வழங்கியே ஆக வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாகவிருக்கும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல், ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது எம்.பி-க்களாக உள்ள அன்புமணி ராமதாஸ், சண்முகம், சந்திரசேகரன், எம்.எம். அப்துல்லா, பி. விலசன், வைகோ ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், ஜூன் 19-ம் தேதி, தமிழகத்திலிருந்து மீண்டும் 6 எம்.பி-க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

தேமுதிக-விற்கு வாய்மொழி உத்தரவாதம் அளித்த அதிமுக

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளின் உதவியோடு 2 இடங்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலின்போது, தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் ராஜ்யசபா தேர்தல் வாய்ப்பு தருவதாக வாய்மொழி உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனால், தற்போது தங்களுக்கு சீட் கிடைக்கும் என தேமுதிக எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால், அப்படி எந்த உத்தரவாதமும் தரவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களுக்கு சீட் கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது என்ன.?

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து பேசியுள்ளார். தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என்றும், அதிமுக உடனான கூட்டணியில் மாநிலங்களவை இடத்தை பெறுவது தேமுதிகவின் உரிமை என்றும் பிரேமலதா கூறியுள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். அந்த சமயத்தில், 5 இடங்களுடன், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக உறுதி அளித்ததாகவும் பிரேமலதா கூறினார்.

“சொன்ன வார்த்தையை காப்பாற்றுங்கள்“

தொடர்ந்து பேசிய பிரேமலதா, அரசியலில் நம்பிக்கை மற்றும் வார்த்தைகள் முக்கியம் என்றும் சொன்ன வார்த்தைகளை காப்பாற்றினால் தான் மக்கள் உங்களை(அதிமுக) நம்புவார்கள் என்றும் கூறினார். ஏற்கெனவே இரண்டு முறை தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி கிடைக்க வேண்டியது தவறி விட்டது என்று தெரிவித்த பிரேமலதா, ஒரு முறை அன்புமணியும், இன்னொரு முறை ஜி.கே. வாசனும் பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். அவர்களுக்கு அடுத்தபடியாக எங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்தார்கள், அதனால் இது எங்களின் முறை, எங்களுக்குத் தர வேண்டியது அவர்களின் கடமை என்றும் பிரேமலதா திட்டவட்டமாக தெரிவித்தார்.

“திமுக செய்ததுபோல் நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்“

திமுக சார்பில், கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி தற்போது சீட் கொடுத்து நம்பிக்கையை காப்பாற்றியுள்ளதாகவும், அதேபோல், எடப்பாடி பழனிசாமியும் கொடுத்த வாக்கை காப்பாற்றி நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரேமலதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைத்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். அதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் என்ன பதிலளிக்கப் போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.