அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் Professionals’ Congress & Data Analytic பிரிவின் தலைவராக இருப்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி. இவரின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்த ராகுல்காந்தி, பிரவீன் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ள நிலையில், நடிகர் விஜயை சந்தித்து அவரது கட்சியில் ஐக்கியமாகும் முயற்சியில் தீவிரமாக அவர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த பிரவீன் சக்கரவர்த்தி
கடந்த 2024 எம்.பி. தேர்தலில் மயிலாடுதுறையில் போட்டியிட சீட் கேட்டார். ஆனால், அவர் கள அரசியலில் ஈடுபடாததாலும், மக்களை சந்திக்கும் தலைவராக அவர் இல்லாத காரணத்தாலும் அவருக்கு சீட் கொடுக்க காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. அவருக்கு பதிலாக ராகுல்காந்தியின் யாத்திரையில் முக்கிய பங்கு வகித்த தமிழ்நாட்டை சேர்ந்த சுதா என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டடு. அவரும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தியில் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றி பெற்றார்.
சீட் கிடைக்காத விரக்தியில் திமுகவை சீண்டும் பிரவீன்
இந்நிலையில், தனக்கு சீட் கிடைக்காமல் போக திமுகதான் காரணம் என நினைத்துக்கொண்டு திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த அவர் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். Professionals’ Congress தலைவர் என்பதால் ராகுல்காந்தியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு இயல்பாகவே அமைந்தது. அப்படி சந்திக்கும்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கான பணிகள் குறித்து பேசாமல், திமுக – காங்கிரஸ் கூட்டணியை பிரித்துவிடும் சகுனி வேலையை மட்டுமே பார்த்ததாகவும், அடுக்கடுக்கான விஷயங்களை ஆதாரமே இல்லாமல் ராகுல்காந்தியிடம் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
திமுகவுடன் தான் கூட்டணி – உறுதியாக இருக்கும் ராகுல்
ஆனால், இதையெல்லாம் கவனத்தில்கொள்ளாத ராகுல்காந்தி, 2026ல் தமிழ்நாட்டில் திமுகவுடன் இணைந்துதான் காங்கிரஸ் போட்டியிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பிரவீன் சக்ரவர்த்தி. கூட்டணியை பிரிக்கிறேன் பார்! என்று கங்கனம் கட்டிக்கொண்டு விஜய்க்கு ஆதரவாக பேசத் தொடங்கியிருக்கிறார். இதனால், கடும் அதிருப்தி அடைந்திருக்கும் ராகுல்காந்தி அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறார்.
விஜயை சந்தித்த பிரவீன் ?
இந்த விவரம் அறிந்தவுடனே தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் தன்னுடைய சாணக்கியத்தனத்தால் விஜய் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று ஆதவ் அர்ஜூனாவிடம் அளந்துவிட்டிருக்கிறார். அளந்துவிடுவதில் ஏற்கனவே ஆதவ் அர்ஜூனா டாக்டர் பட்டம் பெற்றிருப்பதாக கூறப்படும் நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியும் அருகே இருந்தால் ஜோராக இருக்கும் என நினைத்து அவரை விஜயிடம் அழைத்துச் சென்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரவீனின் ட்ராக் ரெக்கார்ட் அறிந்த விஜய்
ஆனால், யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம் என்ற ஆதவ் மனநிலையில் இருந்து மாறுபட்டிருக்கும் விஜய், பிரவீன் சக்ரவர்த்தி தன்னுடைய சுயநல அரசியலுக்காக எதையும் செய்யத் துணிவார் என்பதால் அவரை உடனடியாக கட்சியில் இணைக்க தயங்குவதாகவும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் டேட்டா செல் தலைவராக நியமிக்கப்பட்ட பிரவீனின் தவறான அணுகுமுறையாலும் தவறான தகவல்களை ராகுல்காந்திக்கு அளித்ததாலுமே அந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்று மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது என்ற விவரத்தையும் அவர் அந்த பிரிவின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதையும் விஜயின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி எடுத்து கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தன்னுடைய அரசியல் சாணக்கியத்தனம் விஜயிடமும் பலிக்காமல் போய்விடுவோம் என்ற அச்சத்தில் பிரவீன் சக்கரவர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரவீன் சக்கரவர்த்தி குறித்து வரும் தகவல்கள், அவர் மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மையா என்று அறிய, அவரை தொடர்புகொண்டபோது நமது அழைப்பை அவர் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.