ஐபேக் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங்குக்கான முதன்மை ஆலோசகர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 2022ம் ஆண்டுக்கான பொதுவாழ்க்கையிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் அதன் காரணத்தால் பதவி விலகியுள்ளதாகவும் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்ரிந்தர் சிங்குக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,’பொது வாழ்க்கையிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்ள இருக்கும் காரணத்தால் என்னால முதன்மை ஆலோசகர் பொறுப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. எனது எதிர்கால திட்டங்களை நான் முடிவு செய்யவில்லை. இந்த நிலையில் ஆலோசகர் பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த மாநிலத்தில் 2022ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாகக் கடந்த மாதம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை பிரசாந்த் கிஷோர் சந்தித்திருந்தார். தேசிய வாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் உட்பட பல்வேறு தலைவர்களை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதோடு மட்டுமில்லாமல் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி போன்றவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தியப்பின்பு காங்கிரசில் பிரசாந்த் கிஷோர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இருந்தப்போதும் வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதற்காக இந்த சந்திப்புகள் நடைபெற்றது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் இது போன்ற சந்திப்பு முதல்முறை அல்ல என்றும் ஊடகங்களில் வெளியாவதை போல் இது பஞ்சாப் சிக்கலுக்கான சந்திப்பு அல்ல என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு பிறகு பதவி விலகினார். அதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். ஆனாலும் அடுத்த தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த கட்சி கூட்டங்களிலும் கூட சரியான முடிவுகள் எட்டப்படாமல் இருந்தே வந்தது.
இந்நிலையில் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டார். அங்கு காங்கிரஸ் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் மற்ற இடங்களில் அக்கட்சியால் வெற்றி பெற இயலவில்லை. இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கும் பிரசாந்த் கிஷோருக்குமான தொடர்பு இருந்தே வந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பில் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். இதனிடையே பிரசாந்த் கிஷோரின் சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பஞ்சாப் அரசு ஆலோசகராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் சார்பில் சித்து மற்றும் அமரிந்தர் சிங் இடையேயான மோதல் குறித்த ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இதற்கிடையேதான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே தற்போது பிரசாந்த் கிஷோரின் பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.