அ.தி.மு.க.வில் கடந்த ஒரு வாரகாலமாக ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. அ.தி.மு.க.வை முழுவதும் கைப்பற்றும் விதமாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டசெயலாளர்களின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று ஆவடி காவல் நிலையத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை காவல்துறையினர் தள்ளுபடி செய்துள்ளனர். பொதுக்ழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தாக்கல் செய்த மனுவின்படி, பொதுக்குழு கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.




இதையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து உரிய பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாகவும். ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெறுவதால் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு இல்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.


சென்னை, வானகரத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபமான ஸ்ரீவாரு மண்டபத்திலே அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறையும் அங்கே பொதுக்குழு கூட்டம் நாளை நடக்கிறது. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள தனியார் மண்டபத்திலும், அதைச்சுற்றிய பகுதிகளிலும் போலீசார் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.




அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு எதிரான வழக்குகள் இன்று நண்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  முன்னதாக, ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக அ.தி.மு.க. பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதில் உறுதியாக உள்ளனர்.


ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாளர்கள் 12ல் இருந்து 7 ஆக குறைந்த நிலையில், மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் சென்று ஆதரவு அளித்துள்ளார். இதனால், அவருக்கு ஆதரவு அளித்து வந்த மாவட்ட செயலாளர்கள் பலம் 6 ஆக குறைந்துள்ளது.  மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு பெருகிவருகிறது. இந்த சூழலில், ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் அ.தி.மு.க.வில் அராஜகப் போக்கும், சர்வாதிகாரப்போக்கும் நிலவி வருவதாகவும், சூது கவ்வினாலும் தர்மம் மறுபடி வெல்லும் என்றும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண