தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத கட்சியில் ஒன்று பாமக. வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கி கொண்ட பாமக-வில் கடந்த தேர்தலுக்கு முன்பு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்தது.

Continues below advertisement

ஒதுங்கிய ராமதாஸ்:

பாஜக கூட்டணியில் இடம்பிடித்த அன்புமணிக்கே கட்சியும், சின்னமும் என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவால் மாம்பழ சின்னத்தில் அன்புமணி தலைமையிலான பாமக போட்டியிட்டது. 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது அன்புமணி தலைமையிலான பாமக. கடந்த தேர்தலில் எந்த ஒரு தாக்கத்தையும் ராமதாஸால் ஏற்படுத்த முடியாத நிலையில், தன்னுடைய 88வது பிறந்தநாளில் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார் ராமதாஸ். அவரது ஆதரவாளர்களுக்கு இது பேரதிர்ச்சியாகவே அமைந்தது.

ஆதரவாளர்கள் கதி என்ன?

ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் வெடித்தபோதே கட்சியில் இருந்த ஏராளமான நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள் பலரும் அன்புமணி பக்கம் தாவிவிட்டனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் ராமதாஸ் பக்கமே இருந்தனர். தற்போது ராமதாஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததால் தற்போது அவர்களின் நிலை என்னவென்ற கேள்வி எழுந்துள்ளது.

Continues below advertisement

முன்னாள் எம்எல்ஏ-வான அருள் கட்சியில் இருந்து விலகிவிட்ட நிலையில், மற்ற நிர்வாகிகள் என்ன செய்யலாம்? என்ற குழப்பத்தில் உள்ளனர். ராமதாஸ் ஆதரவாளர்களாக அன்புமணியை மிக கடுமையாக விமர்சித்த அவர்களை கட்சியிலே தக்கவைத்துக் கொள்ளலாமா? அவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கலாமா? அல்லது அவர்களை அதிகாரமற்ற பொறுப்புகளை வழங்கி கட்சியில் தொடர வைக்கலாமா? என்ற ஆலோசனையில் உள்ளார்.

அருள் போடும் ஸ்கெட்ச்:

அதேசமயம், கட்சியில் இருந்து விலகியுள்ள முன்னாள் எம்எல்ஏ அருள் பாமக-வில் உள்ள அன்புமணிக்கு எதிரானவர்களை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வன்னிய சமுதாய வாக்குகளை குறிவைத்து வட தமிழகத்தில் பாமக-விற்கு போட்டியாக புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. கட்சி தொடங்குவதற்கு தேவையான நிதிக்காக அவர் வட தமிழகத்தில் உள்ள பல முக்கிய தொழிலதிபர்களை நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

என்ன செய்யப்போகிறார் அன்புமணி?

கட்சியில் இருந்து பல்வேறு முக்கிய புள்ளிகளை தன்பக்கம் அருள் திரட்டுவது குறித்தும் அன்புமணி ஆலோசனை நடத்தி வருகிறார். அருள் பக்கம் ராமதாஸ் ஆதரவாளர்கள் சென்றுவிடாமல் இருப்பதற்கும், மற்ற கட்சிகள் போல பாமக-விலும் இளைஞர்கள் பட்டாளத்தை மேலும் அதிகரிக்கவும் அன்புமணி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை  நடத்தி வருகிறார்.