ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு முற்றிவிட்டது. அதன் உச்சகட்டமாக, அன்புமணி தன்னுடைய பெயருக்கு பின்னால் தனது பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது“
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள எஸ்.இ.டி மஹாலில், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், தஞ்சை, திருவாரூர் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது என்று கூறினார். தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிஷியலாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் என் பேச்சை கேட்காதவர் என் பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும், ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக கூறுகின்றனர், இந்த ஐந்து வயது குழந்தைதான், 3 வருடங்களுக்கு முன்பு அன்புமணியை பாமக தலைவராக்கியவன் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டார்.
தந்தை, மகன் இடையே தொடரும் மோதல்
பாமக நிறுவனரான ராமதாசுக்கும், பாமக தலைவரும், அவரது மகனுமான அன்புமணி ராமதாசிற்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. கட்சியில் யாருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதுதான் அவர்கள் இருவருக்குள்ளும் உள்ள பிரச்னை.
அதற்காக, கட்சிக்குள் தங்கள் பலத்தை நிரூபிப்பதற்காக, இருவரும் தங்களது ஆதரவாளர்களை திரட்டி, தனித்தனியே கூட்டங்களை நடத்தி வருகின்றனர். கட்சியில் உள்ள அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், உடனடியாக, நீக்கப்பட்டவர்கள் கட்சியில் அதே பதவியில் நீடிப்பார்கள் என்று அன்புமணி அறிவிப்பதுமாய் இருக்கிறது.
எம்எல்ஏ அருள் விஷயத்தில், அவர்களது சண்டை சட்டப்பேரவை வரை சென்றுள்ளது. இது ஒருபக்கம் என்றால், இருவரும் மேடையேறி, ஒருவர் மீது ஒருவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி வருவதும், பாமக தொண்டர்களிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
மாறி மாறி தீர்மானங்களை நிறைவேற்றிய இரு தரப்பினர்
நேற்று முன்தினம் கூட, ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டமும், அன்புமணி தலைமையில் பாமக முக்கிய நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற்றது. ராமதாஸ் நடத்திய கூட்டத்தில், கட்சியின் முடிவுகளை எடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ராமதாஸின் பேச்சுக்கு கட்டுப்படாத அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனது செயலுக்கு அன்புமணி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கேட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனிடையே, ராமதாஸின் செயற்குழு கூட்டம் செல்லாது என்றும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என, அன்புமணி நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்படி மாறி மாறி இரு தரப்பினரும் அதிரடி செயல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், அதன் உச்சகட்டமாக, தனது பெயரையே அன்புமணி பயன்படுத்தக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.