தமிழ்நாட்டில் மிக முக்கிய கட்சிகளில் ஒன்றாக பா.ம.க., இருந்து வருகிறது. பா.ம.க., கடந்த சில தேர்தல்களில் தோல்வியை சந்தித்தாலும், கூட்டணி அரசியலில் முக்கிய கட்சியாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் வடதமிழ்நாட்டில் பாமகவிற்கு இருக்கும் செல்வாக்கு தான். கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் பாமக செல்வாக்காக இருப்பதால், திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் பாமக உடன் கூட்டணி அமைப்பதை விரும்புகின்றன. இந்தநிலையில் பாமகவின் முக்கிய முகமாக பார்க்கப்படுகின்ற, ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே மோதல் போக்கு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை மகன் மோதல்
பாமகவின் நிறுவனராக இருந்து வந்த ராமதாஸ், கடந்த ஏப்ரல் மாதம் செய்தியாளர்களை சந்தித்தபோது, பாமகவின் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்கிறேன் என அறிவித்தார். தொடர்ந்து அன்புமணி ராமதாசை செயல் தலைவராக அறிவித்ததில் இருந்து, பாமக இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி, தனது ஆதரவாளர்களை ராமதாஸ் நியமிக்க தொடங்கியது கட்சியின் பிளவை உறுதிப்படுத்தியது. அன்புமணி ராமதாஸ் தரப்பில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு தான், முழு அதிகாரம் இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
அன்புமணியின் நடைபயணம்
அன்புமணி ராமதாஸ் திருப்போரூரில், கடந்த 25-ஆம் தேதி தனது நடை பயணத்தை தொடங்கினார். தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் என்ற பெயரில் அவரது நடை பயணத்திற்கு, பாமகவினர் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நடை பயணத்திற்கு ராமதாஸ் தடை விதிக்க வேண்டும் என, காவல்துறை மற்றும் உள்துறைக்கு மனு அளித்திருந்தார்.
பொதுக்குழு அறிவிப்பு
ராமதாஸ் தரப்பிலிருந்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி, சிறப்பு பொதுக்குழு நடத்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களிலே, அன்புமணி தரப்பிலிருந்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருவரும் பொதுக்குழு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருப்பது, பாமகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ் ஆதரவாளர்கள் சொல்வதென்ன ?
இது குறித்து ராமதாஸ் ஆதர்வாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம்: " பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் இருக்கிறார். அவருக்கு தான் பொதுக்குழு கூட்டும் அதிகாரம் உள்ளது. நிறுவனரின் வழிகாட்டுதலுடன் தான், பொதுக்குழு கூட்ட வேண்டும்" என தெரிவித்தனர்.
அன்புமணி ஆதரவாளர்கள் சொல்வதென்ன ?
இதுகுறித்து அன்புமணி ஆதரவாளர்களிடம் தொடர்பு கொண்டு பேசினோம்:: " பாமக அமைப்பு விதி 16-இன் கீழ் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மாநிலப் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பெற்றவர். மேலும், விதி 15-இன் கீழ் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத் தலைவர் தலைமையில் நடைபெறுவது, மட்டுமே சட்டப்படியான பொதுக்குழு ஆகும் என தெரிவித்தனர்.
அன்புமணியின் பதவி காலம் ?
மேலும் கூறுகையில், ”அன்புமணி இராமதாஸ் அவர்களது பதவிக் காலம் முன்றாண்டுகளில், அதாவது மே-28 அன்று, முடிந்துவிட்டதாக, கூறுவது உண்மை இல்லை. பாமக தலைவரின் பதவிக் காலம் 3 ஆண்டுகளில் முடியாது. அன்புமணி இராமதாஸ் பாமக தலைவராக ஜூன் 2026 வரை நீடிக்கிறார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாமகவின் அடுத்த தலைவர், பொதுச்செயலாளரை பாமக பொதுக்குழு மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதுவரை இப்போது இருப்பவர்களே நீடிப்பார்கள்.
ஜி.கே. மணி தலைவராக இருந்த காலத்தில், அவர் 4 ஆண்டுகளுக்கு தேர்தல் இல்லாமலேயே தலைவராக இருந்தார். இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அரசியல் கட்சிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்ய வேண்டும்” என விளக்கம் அளித்தனர்.
கட்சியை கைப்பற்றப்போவது யார்?
இரண்டு தரப்பும் பொதுக்குழுவை கூட்ட இருப்பதால், இருவரில் யார் கட்சியை கைப்பற்ற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு தரப்பும் சமாதானமாக போக வேண்டும் என்பதே, பாமக தொண்டர்களின் ஆசையாகவும் இருக்கிறது.