திமுக, அதிமுக இடையே தான் போட்டி, மற்றவர்களை பொருட்படுத்தீர்கள்! அன்புமணி ராமதாஸ் அதிரடி!
"இந்த தேர்தலில் திமுக- அதிமுக இடையே தான் போட்டி , மற்றவர்களை பொருட்படுத்தீர்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்."

சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
கல்விக்கடன் ரத்து செய்யாதது ஏன் ? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ், ஓட்டுக்காக ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பதற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் அரசு, மாணவர்களின் 5 ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்கடனை ரத்து செய்ய மட்டும் நிதி இல்லை என்று கூறுவது ஏன் என வினவினார். அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராடும்போது நிதி இல்லை என்று சொல்லும் அரசு, தேர்தலுக்காக மட்டும் கடன் வாங்குவது வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டார்.
அரசுப் பள்ளிகளின் அவலநிலை
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்திலிருந்து 30 லட்சமாகக் குறைந்துவிட்டதாகத் தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 200-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சியே ஓங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தாய்மொழி தமிழ் கற்காமலேயே தமிழகத்தில் பட்டம் பெற முடியும் என்ற நிலை நீடிப்பது வருத்தமளிப்பதாகக் கூறினார்.
நீட் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விமர்சனம்
நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் வைத்திருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை அதைச் செய்யாததால் 50 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று சாடினார். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, 5 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை தருவதாகக் கூறிவிட்டு, இதுவரை 94 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்தில் 1.30 கோடி பட்டதாரிகள் வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில், முதலீடுகள் குறித்துப் பொய்யான விளம்பரங்களை அரசு செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
சட்டம் ஒழுங்கு மற்றும் ஊழல் புகார்கள்
தமிழகத்தில் கஞ்சா, போதைப்பொருள் மற்றும் சாராய கலாச்சாரம் பெருகிவிட்டதாகக் கூறிய அன்புமணி, இது ஒரு 'சாராய ஆட்சி' என்று விமர்சித்தார். ஆட்சி முடிய சில வாரங்களே உள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்ட சுரங்கங்களுக்கு அனுமதி அளித்தது ஏன் என்றும், கடந்த காலங்களில் ஆயிரம் மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் 1500 கோடி ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
தேர்தல் களம் மற்றும் கூட்டணி
தமிழக வரலாற்றிலேயே மிக மோசமான முதலமைச்சர் என்று மு.க. ஸ்டாலினை விமர்சித்த அவர், இந்த ஆட்சியை மக்கள் தூக்கி எறியத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்த அவர், திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாகவும், அவர்களே கூட்டணியை உடைத்துக்கொள்வார்கள் என தெரிவித்தார்.























