அதிமுக - பாஜக கூட்டணிக்கு செக்.. பின்னணியில் ஜி.கே.மணியின் பிளான்.. அவரை இயக்குவது யார் ?
Pmk Anbumani vs Ramadoss: அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவை கொண்டு செல்லக்கூடாது என்பதற்காக, ஜி.கே.மணி கட்சிக்குள் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருவதாக பாமகவினர் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய காட்சிகளில் ஒன்றாக பாமக இருந்து வருகிறது. இந்தநிலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனைக்கு பின்னணியில், கூட்டணிக் கணக்குகள் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இரண்டு கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்றால், பெரும்பாலான தேர்தல்களில் கூட்டணி என்பது மிகப்பெரிய பங்காற்றி வருகிறது.
கூட்டணி அரசியலில் இரண்டு விதம்
ஒவ்வொரு கட்சியும், பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும் என அதற்கேற்றார் போல், காய்களை நகர்த்துவது வழக்கம். அதேபோன்று எதிர் தரப்பில் பெரிய கூட்டணி உருவாகாமல் தடுப்பதும், அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. தங்களுக்கு எதிராக பெரிய கூட்டணி உருவாகாமல், பார்த்துக் கொண்டாலே தங்கள் வெற்றி பெறலாம் என்பதால், எதிர்தரப்பு கூட்டணியை உடைக்கும் வேளையில் மறைமுகமாக ஈடுபடுவார்கள்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, விடுதலை சிறுத்தை கட்சியை நம்பி அதிமுக பலமான கூட்டணியை, அமைக்க முடியாமல் தேர்தலில் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இதன் பின்னணியில் திமுக இருந்ததாக அப்போதே, பல்வேறு கருத்துக்கள் எழுந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக - பாஜக கூட்டணி
இந்த முறை அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணியை அமைத்துள்ளது. 2024 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்றியது. அதில் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 47%, அதே நேரம் அதிமுக கூட்டணி 23% வாக்கையும், பாஜக கூட்டணி 18% வாக்கையும் பெற்றது. வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிகள் ஒன்றாக தேர்தலை சந்தித்தால் திமுகவிற்கு சவாலை கொடுக்க முடியும் என ஒரு சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.கவுடன் பா.ம.கவும் போட்டியிட்டது. எனவே, அதிமுக மற்றும் பா.ஜ.க கூட்டணியில் பாமகவை கொண்டுவர வேண்டுமென இரண்டு கட்சிகளும் இப்போதே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை பின்னணியில், கூட்டணி கணக்குகள் உள்ளதாக, முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாமக உட்கட்சி பூசல் பின்னணி என்ன ?
பா.ம.கவில் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி விவகாரம் குறித்து, பாமக சார்பில் விசாரித்தபோது, பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் கூட்டணி அமைவதை திமுக தரப்பு விரும்பவில்லை என பாமகவினர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
தொடர்ந்து அவர்களிடம் பேசியபோது, தந்தைக்கும் மகனுக்கும் பிரச்சனை இருப்பது உண்மைதான், ஆனால் அந்தப் பிரச்சினை பேசி சரி செய்து விட முடியும். ஆனால் அந்த பிரச்சனையை சரி செய்யவிடாமல் ஜி.கே. மணி காய்களை நகர்த்தி வருகிறார், எனவும் பாமக நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஜி.கே.மணியின் மறைமுகத் திட்டம்
ராமதாஸ் தன்னிடமிருந்த தலைவர் பதவியை, தனது மகன் அன்புமணிக்கு கொடுத்ததிலிருந்து, ஜி.கே.மணிக்கு அன்புமணி மீது கோபம் இருந்து வந்துள்ளது. அவரது மகனுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டு, அதன் பிறகு அந்த பதவி பறிக்கப்பட்டது. இதன் பிறகு ஜி.கே.மணிக்கு அன்புமணி மீது கோபம் அதிகரித்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து ராமதாஸின், உடல் மற்றும் மனநிலையை பயன்படுத்திக் கொண்டு தந்தை, மகனுக்கு இடையே இருந்த சிறு பிரச்சனைகளை பெரிதாக்கி கொண்டு வந்துள்ளார் என்ற தகவலையும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பா.ம.க நிர்வாகிகள் கூறுகையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உருவாக்கிய பிறகு, அந்தக் கூட்டணியில் பாமக செல்வது என்பது தி.மு.க தரப்புக்கு பிடிக்கவில்லை, ஜி.கே. மணி ஏற்கனவே திமுகவுடன் நெருக்கமாக இருக்கிறார். அந்த தொடர்புகளை வைத்து, ஜி.கே.மணி மூலம் அதிமுக -பாஜக - பாமக கூட்டணி உருவாகாமல் தடுக்கவே இருவருக்கிடையே உள்ள பிரச்சனையை சரி செய்யவிடாமல், ஜி.கே.மணி பார்த்துக்கொள்வதாகவும் பாமக தரப்பிலிருந்து புது தகவல்கள் வெளியாகி உள்ளன.





















