Ramadoss: “என் மூச்சு இருக்கும் வரை..“, கலைஞர் பாணியில் பயணம் - மீண்டும் அதிரடி காட்டிய ராமதாஸ்
“என் மூச்சு இருக்கும் வரை நானே தலைவர்“ என்று கூறி, மீண்டும் அதிரடி காட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அவர் பேசியதன் முழு விவரத்தை காணலாம்.

தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், எல்லா பிரச்னைக்கும் ஒரு முடிவு உள்ளது, ஆனால் அந்த முடிவு இன்னும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் பேசியது என்ன.?
தனது தைலாபுரம் இல்லத்தில், புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுவரும் ரமதாஸ், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அன்புமணி மன்னிப்பு கேட்பது இங்கு பிரச்னை இல்லை என்றும், தான் தொடங்கிய கட்சியில் தான் கூறும்படி தான் நடக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதோடு முக்கியமாக, பாமகவை வளர்த்தது தான் தான் என்றும், தன்னுடைய நண்பர் கருணாநிதியின் பாணியில், தன் மூச்சு இருக்கும் வரை தானே கட்சியின் தலைவராக இருப்பேன் என்றும் ராமதாஸ் அதிரடியாக தெரிவித்தார்.
மேலும், ஸ்டானைப் போல் அன்புமணி காத்திருக்க வேண்டும் என்றும், சமரச பேச்சுவார்த்தை நடந்துகொண்டே இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், தன்னோடு ஆரம்பத்தில் இருந்து பயணித்தவர்களுக்கு பதவி கொடுத்துள்ளதாகவும், தற்போது தான் நியமித்துள்ள நிர்வாகிகள் தான் நிரந்தரமான நிர்வாகிகள் என்றும் ராமதாஸ் திட்டவட்டமாக கூறினார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும் என்று தெரிவித்த அவர், செயல் தலைவர் என்பத சிறந்த பொறுப்பு என்றும், அதை அன்புமணி ஏற்க மாட்டேன் என்கிறார் என ஆதங்கம் தெரிவித்தார்.
மேலும், எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு முடிவு உண்டு என்றும், அந்த முடிவு இன்னும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
“என்னுடன் இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட்“
முன்னதாக, நேற்று புதிய மாவட்ட நிர்வாகிகளுடன்ன ஆலோசனைக் வட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், பாமக எந்த கூட்டணியில் போட்டியிடும் என்பது குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை என்றும், தன்னுடன் இருக்கும் நிர்வாகிகள் தான் பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும், அவர்களுக்குத் தான் சீட் வழங்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
அதேபோல், பாமகவில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற அதிகாரம் தனக்கே உண்டு என உறுதிபட தெரிவித்தார். பாமகவின் கூட்டணி குறித்து பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் நல்ல கூட்டணி, வித்தியாசமான கூட்டணி, வெற்றி பெறு கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினார்.
இப்படிப்பட்ட சூழலில், இன்றும் தன்னுடைய கருத்தை இன்னும் ஆணித்தனமாக அவர் கூறியுள்ளதால், தற்போது அன்புமணியின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. ஒன்று, அவர் செயல் தலைவர் பதவியை மீண்டும் ஏற்று, தந்தை சொல்வதை கேட்டு பணியாற்ற வேண்டும். அல்லது தனியாக ஒரு கட்சியை அவர் தொடங்க வேண்டும். இந்த இரண்டு வாய்ப்புகள் தான் தற்போது அன்புமணியின் முன்னே உள்ளது. அதில் அவர் எதை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















