தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான பாமக மட்டும் உள்கட்சி மோதலால் சிதைந்து வருகிறது. அதிகாரம் யாருக்கு? கட்சி முடிவுகள், கூட்டணி முடிவுகள் யார் எடுப்பது? என்ற தந்தை ராமதாசிற்கும், மகன் அன்புமணிக்கும் நடக்கும் மோதல் உச்சகட்டத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
வடிவேல் ராவணன் நீக்கம்:
அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து தொடர்ந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வரும் ராமதாஸ் தற்போது, பாமக-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான வடிவேல் ராவணனை நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவருக்கு பதிலாக முரளி சங்கர் என்பவரை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
வடிவேல் ராவணன் சுமார் 45 ஆண்டு காலமாக பாமகவில் இருப்பவர். 1980ம் ஆண்டு முதல் பாமக-வில் இயங்கி வரும் வடிவேல் ராவணனை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை ராமதாஸ் தொடர்ந்து நீக்கி வருவது கட்சியின் தொண்டர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
உச்சத்தில் ராமதாஸ் - அன்புமணி மோதல்:
ராமதாஸ் பலரையும் நீக்கி வரும் நிலையில் கட்சியின் தலைவர் தானே என்றும், தான் எடுக்கும் முடிவுகள் மட்டுமே செல்லும் என்றும், நிர்வாகிகளை நியமிக்கும், நீக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே என்றும் அன்புமணி ஒருபுறம் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார். தந்தைக்கும், மகனுக்கும் நடக்கும் இந்த மோதலால் கட்சியின் மற்ற நிர்வாகிகள் யாருக்கு ஆதரவாக இருப்பது? என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
பதவியையையும் காப்பாற்றிக் கொண்டு, கட்சியில் செயல்படுவது மிகப்பெரிய சவாலாக தற்போது பாமக-வினருக்கு மாறியுள்ளது. அதேசமயம் இன்னும் ஓராண்டு மட்டுமே தேர்தலுக்கு உள்ள நிலையில் ராமதாஸ் - அன்புமணி இருவரையும் சமாதானப்படுத்த ஜிகே மணி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்.
சமாதானப்படுத்த தலைவர்கள் தீவிரம்:
ஆனாலும், இவர்கள் இருவரும் சமாதானப் போக்கிற்கு செல்லாமல் தொடர்ந்து தங்கள் நிலைப்பாட்டிலே தீவிரமாக உள்ளனர். தற்போது பாமக பா.ஜ.க.வின் கூட்டணியில் உள்ள நிலையில் இவர்களை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் பாஜக-வும் இறங்கியுள்ளது.
இன்று தந்தையர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த அன்புமணி தந்தைகள் என்றாலே தியாக தீபங்கள் என்று பதிவிட்டுள்ளார். ராமதாஸ் தியாகம் செய்ய வேண்டும் என்பதையே அன்புமணி மறைமுகமாக தெரிவித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரின் மோதல் காரணமாக கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு வருவது கட்சிக்கு ஆரோக்கியமற்றதாக கீழ்மட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் வேதனை அடைந்துள்ளனர்.