முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு அவரை கைது செய்திருக்கிறது காவல்துறை. அதுவும் அவரது முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக அவதூறு வழக்குகளில் கடந்த காலங்களில் பெரிய அளவிலான கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை. ஆனால், அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்தே ஆக வேண்டும் என்று முதல்வர் விஜய் நினைத்ததால், முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட 90 நிமிடங்களில் அவரைத் தேடிச் சென்று கைது செய்திருக்கிறது காவல்துறை.
அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு காரணம் ஆதவ் அர்ஜூனா?
முதல்வர் விஜய் குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாக பேசிய அந்த நிகழ்ச்சியிலேயே அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரை ஒருமையில் பேசியதுடன் முடிந்தால் உன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திருச்செந்தூரில் வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என சவால் விட்டிருந்தார். அதோடு, தமிழ்நாட்டில் ஆதவ் அர்ஜூனா லாட்டரி சீட்டு விற்று கொள்ளையடிக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றும் காட்டமாக விமர்சித்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்த ஆதவ் அர்ஜூனா அவரை கைது செய்ய வேண்டும் என்று விடாப்படியாக இருந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், நடிகை குறித்தும் முதல்வர் விஜய் பற்றியும் அனிதா ராதாகிருஷ்ணன் இணைத்து பேசியது முதல்வர் விஜயையும் உஷ்ணமாக்கியிருக்கிறது. இதனால், அவர் மீது தவெக நிர்வாகியை புகார் கொடுக்க வைத்து உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையறிந்த அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட 90 நிமிடங்களுக்குள்ளேயே அவரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
முதல்வர் அலுவலகதில் இருந்து சென்ற போன் கால் ?
அனிதா ராதாகிருஷ்ணன் மீதான முன் ஜாமீன் மனு இன்று விசாரணை வருகிறது என்பதும் அது தள்ளுபடியாக அதிக வாய்ப்பிருப்பதையும் முன் கூட்டியே கணித்த முதல்வர் அலுவலக அதிகாரிகள் அதை தீவிரமாக பாலோ செய்ததாகவும், முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடனேயே தூத்துக்குடி எஸ்.பி யை தொடர்புகொண்டு முக்கிய அதிகாரி ஒருவர் பேசி, அனிதா ராதாகிருஷ்ணனை தூக்கச் சொன்னதாகவும், இவை அனைத்தும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கண் அசைவிலேயே நடந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
