கொங்கு மண்டலத்தில் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தேர்தல் பணியில் முன்னனியில் உள்ளது அதிமுக, ஆளுங்கட்சியான திமுக இன்னும் கூட்டணி தொடர்பாக எந்தவித முடிவும் அறிவிக்காமல் உள்ள நிலையில், எதிர்கட்சியான அதிமுக கூட்டணியை உறுதி செய்து வேட்பாளர் நேர்காணலையும் நடத்தி முடித்துள்ளது. அடுத்தாக அசத்தலான 10 தேர்தல் வாக்குகறுதிகளையும் அறிவித்து தேர்தல் பணியில் முன்னனியில் அதிமுக உள்ளது. இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் அதிமுக 66, பாமக 5, பாஜக 4 கைப்பற்றியது.
கொங்கு மண்டலத்தை கைப்பற்ற அதிமுக போடும் பிளான்
திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளில் வென்றது திமுக மட்டும் தனியாக 133 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டும் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் அதிமுக கூட்டணி சுமார் 44 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. தென் மற்றும் வட மாவட்டங்களில் மொத்தமாகவே 30 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே வருகிற 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கொங்கு மண்டலத்தை கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்தோடு அதிமுக செயல்பட்டு வருகிறது.இதற்கு ஏற்ப கொங்கு மண்டலத்தில் களப்பணியை தொடங்கியுள்ளது. தற்போதே அந்த பகுதியில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் யார் என ரகசிய சர்வே எடுத்துள்ளது.
பெஸ்ட் ராமசாமி அதிமுகவிற்கு ஆதரவு
இந்த நிலையில் தான் அதிமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் இருந்து அடுத்தடுத்து ஆதரவுகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் தான் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தமிழ் நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அதிமுகவிற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
நமது கொங்கு முன்னேற்றக் கழகம் அதிமுகவிற்கு ஆதரவு
இதே போல அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நமது கொங்கு முன்னேற்றக் கழக மாநிலப் பொதுச் செயலாளர் M. தங்கவேல் தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தமிழ் நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அதிமுகவிற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்துக்கொண்டனர். அதற்கு, எடப்பாடி பழனிசாமி தமது மனமார்ந்த நன்றியையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே அதிமுக வலுவாக உள்ள நிலையில் அடுத்தடுத்து குவியும் ஆதரவால் அதிமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
