OPS Press Meet: பாஜகவினர் முறித்துக்கொள்ளும் வரையில் அவர்களுடன் கூட்டணியில் நீடிப்பேன் என ஓ.ப்ன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அதில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தேன். ஆதிவாசி பெண்களுக்கு நடைபெற்றது போன்ற சம்பவங்கள் மேற்கொண்டு நடைபெறாமல் அரசுகள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மேலும், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் மக்களுக்கு கவனம் பெறும் வகையில் குரல் எழுப்புவோம் என தெரிவித்தார்.
போராட்டத்தின்போது திண்டுக்கல் சீனிவாசன் முதலமைச்சர் ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என கூறியுள்ளாரே என கேள்வி கேட்கப்பட்டதற்கு, இதுகுறித்து சீனிவாசன் அவர்களிடம்தான் கேட்கவேண்டும் எனவும் எங்கிருந்தாலும் சீனிவாசன் வாழ்க கூறினார்.
NDA கூட்டணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உங்களுக்கு அழைப்பு வந்ததா? உங்களின் அடுத்தகட்ட அரசியல் பயணம் எப்படி இருக்கப்போகிறது என கேட்டதற்கு, எனக்கு அழைப்பு வரவில்லை, அதனால் நான் போகவில்லை என கூறினார்.
பாஜகவுடனான கூட்டணியில்தான் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, நான் பாஜகவுடன் தான் கூட்டணியில் உள்ளேன். அவர்களாகவே முறித்துக்கொள்ளும் வரை அவர்களுடன் தான் கூட்டணியில் இருப்பேன் எனக் கூறினார்.
அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை சோதனைகள் பாராளுமன்ற தேர்தலுக்காகவா? என்ற கேள்விக்கு, ஒரு அமைச்சர் மீது வழக்கு தொடரப்பட்டால் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும் என பதில் அளித்தார்.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தாலும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என உங்களது பெயரை பதிவு செய்துள்ளதே என்ற கேள்விக்கு, உங்களுக்கு புரிகிறது. புரியவேண்டியவர்களுக்கு புரியவில்லை எனக் கூறினார்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிக்கு INDIA என பெயரிடப்பட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து? என்ற கேள்விக்கு, INDIA என்ற பெயர் நல்ல பெயர் தான். அந்த பெயரை உள்ளபடியே வரவேற்கிறேன் எனக் கூறினார்.
மேலும், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் வழக்கிற்கு மேல் முறையீடு செய்வீர்களா என்ற கேள்விக்கு, நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என கூறினார்.
பாஜக கூட்டணி குறித்து அவரது கருத்துக்கு, தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த நாராயணன் திருப்பதி கூறியதாவது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக உள்ளது. அதன் பிரதிநியாக எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என கூறியுள்ளார்.