பீகார் தேர்தல் முடிவடைந்த நிலையில், அடுத்து தேர்தல் நடக்கவிருக்கும் தமிழ்நாட்டை குறி வைத்து பாஜக தன்னுடைய பணிகளை தொடங்கியிருக்கிறது. அதன் முக்கியப் பகுதியாக வரும் 19ஆம் தேதி கோவைக்கு வருகிறார் பிரதமர் மோடி. இயற்கை விவசாயிகள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் கோவை வருவதாக சொன்னாலும் அவரது இந்த பயணத்தில் ஏராளமான அரசியல் கணக்குகள் அடங்கியிருக்கின்றன.

Continues below advertisement

ஆபரேஷன் தமிழ்நாடு – பாஜகவின் ப்ளாண்

இந்தியா முழுவதும் ஒற்றை ஆட்சி என்ற கொள்கை முழக்கத்தோடு செயல்பட்டு வரும் பாஜகவிற்கு தென்மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் சவாலாக இருக்கின்றன. புதுச்சேரியில் மட்டும் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தியிருக்கும் பாஜக. 2026ல் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளாவை குறித்து வைத்து ‘ஆபரேஷன் சவுத்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.  குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவை வீழ்த்துவதே அவர்களது முக்கிய இலக்கு. அதற்காக தங்களது ஆஸ்தான அஸ்திரங்களான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்த பாஜக திட்டமிட்டிருப்பதாகவும் விரைவில் திமுகவின் முக்கிய முகங்களை நோக்கி அந்த அமைப்புகள் புலியின் வேகத்தில் பாயவிருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கிறது. அதற்கு ‘ஆபரேஷன் TN’ என பெயர் சூட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஏற்கனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் புகார்களை எழுப்பி டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி வழக்கு பதிவு செய்ய கோரியிருக்கும் நிலையில், இன்னும் பல வழக்குகளை புலனாய்வு  அமைப்புகள் கையில் எடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

Continues below advertisement

பாஜகவிற்கு அஞ்சாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதனை முன் கூட்டியே அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளை வைத்து திமுகவை அச்சுறுத்த பார்த்தார்கள். ஆனால், அவர்களால் திமுகவை எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது S.I.R மூலம் திமுவை அழிக்க பார்க்கிறார்கள். ஆனால், அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் இந்த கட்சி பெயர் திமுக. இது தமிழ்நாடு என பொளந்து கட்டியிருந்தார். முதல்வரின் இந்த பேச்சையும் தமிழக பாஜக தலைவர்கள், டெல்லி தலைமைக்கு கடத்தியுள்ளனர்.

திமுகவை தாக்கி பேசவுள்ள பிரதமர் மோடி ?

இந்நிலையில்தான், பிரதமர் கோவைக்கு வரும்போது நேரடியாக அவர் திமுகவை தாக்கி பேசவுள்ளதாகவும் அதற்கு ஏதுவாக புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்து அனுப்ப வேண்டும் என்று தமிழக தலைவர்களிடம் பாஜக தலைமை கோரியுள்ளது. பீகார் தேர்தலிலேயே திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் குறிப்பிட்டு அமித் ஷா பேசிய நிலையில், பிரதமர் மோடி பீகார் தேர்தல் முடிந்து தமிழ்நாடு வரவுள்ளது அவர்களது கட்சியினரிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

செங்கோட்டையனை சந்திக்கிறாரா பிரதமர் மோடி

தன்னுடைய இந்த கோவை பயணத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். அதோடு, பிரதமர் மோடியை சந்திக்க ஒ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் தரப்பிலும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், செங்கோட்டையன், ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை பிரதமர் சந்தித்தால், அது அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்களை சந்திக்க பிரதமர் மறுப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், அவரது இந்த பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.