சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் வயிறார நல்ல உணவை சாப்பிடும் வகையில் செயல்பட்டது. தரமான உணவை மலிவான விலையில் கொடுத்ததால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், 19 இடங்களில் அம்மா உணவகங்கள் மூடப்பட்டன. மேலும் மற்ற இடங்களில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, உணவு சமைக்க தரமற்ற பொருட்கள் வினியோகிக்கப்பட்டன. இதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அம்மா உணவகத்திற்கு சென்று ஆய்வு என்ற பெயரில் நாடகம் ஆடியுள்ளார். அம்மா உணவகம் ஏழைகளுக்கு வரபிரசாதம். மூன்று ஆண்டுகளாக முதலமைச்சரோ, அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ என யாரும் ஆய்வு செய்யாத நிலையில் அம்மா உணவகத்தில் தரமற்ற பொருட்கள் மட்டும் வினியோகிக்கப்பட்டன என்று குற்றம் சாட்டினார்.
மத்திய அரசின் உதய் திட்டத்தினால் ஏராளமான நன்மை கிடைத்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் கையெழுத்திட்ட பிறகு தமிழகம் மற்றும் மறுக்க முடியாது. உதய் திட்டத்தில் கையெழுத்திட்டதற்கும் மின்சார கட்டண உயர்விற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு கெட்டுப் போய் சீரழிந்து விட்டது. கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன. கடந்த 200 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் 565 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதிலிருந்தே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை என்ன என்று தெளிவாகத் தெரியும் என்றார். குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க விடாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அதனால் தான் கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் எதிர்கால இளைஞர் சமுதாயம் கெட்டு சீரழியும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இதுபோன்ற குற்றவாளிகளை சட்டரீதியாக தண்டித்தால் மட்டுமே தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை கட்டுக்குள் வரும் என்றார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறித்து இனிமேல் பேசுவதற்கே இடமில்லை. ஊடகத்தினர் நீக்கப்பட்டவர்கள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றனர். அவர்களைப் பற்றி இனிமேல் கேள்வி கேட்க வேண்டாம். நானும் அவர்களைப் பற்றி பேச மாட்டேன். வேண்டும் என்றே திட்டமிட்டு ஊடகங்களின் நேர்காணல்களிலும், விவாத மேடைகளில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களைப் பற்றியே பேசுகின்றனர். திமுக ஆட்சியில் மக்களை பாதிக்க்க்கூடிய எந்த பிரச்சினையைக் குறித்தும் ஊடகங்கள் விவாதிப்பதில்லை. திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்ட நிலையில், ஊடகங்கள் துணை இருப்பதால்தான் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து 23 நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து பேசியுள்ளோம். அவர்கள் அற்புதமான பல தகவல்களை தந்துள்ளனர். அதனடிப்படையில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் வியூகம் வகுக்கப்படும். சட்டமன்றத் தேர்தல் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம் என்று கூறினார்.
திமுகவில் குடும்ப கட்சி என்பதைத் தொடர்ந்து குடும்ப ஆட்சி வந்துவிட்டது. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பது குறித்து முதலமைச்சரிடம்தான் கேட்க வேண்டும். திறமை வாய்ந்த பல்வேறு அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் இருக்கும் நிலையில் வாரிசு என்பதால்தான் உதயநிதிக்கு பொறுப்புகள் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.