கடந்த ஆண்டு இதே காலத்தில் கஞ்சா வேட்டை 1.0 தொடங்கப்பட்டது. அதன்பின் ஓராண்டாகியும் இன்னும் கஞ்சா ஒழிக்கப்படாதது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:


’’தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களாக கஞ்சா வேட்டை 3.0 நடைபெற்று வருவதாகவும், 403 கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.  எதற்காக இந்த நடவடிக்கையோ, அந்த இலக்கை  எட்ட உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!


கடந்த ஆண்டு இதே காலத்தில் கஞ்சா வேட்டை 1.0 தொடங்கப்பட்டது. அதன்பின் ஓராண்டாகியும் இன்னும் கஞ்சா ஒழிக்கப்படாதது ஏன்? அதிக எண்ணிக்கையில் கஞ்சா வணிகர்கள் கைதாவது ஏன்? என்பதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். அதில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்!


கஞ்சா கட்டமைப்பின் வேரைக் கண்டறிக!


கஞ்சா வணிகர்களை மட்டும் கைது செய்வதில் பயனில்லை. மாநிலங்களைக் கடந்து பரந்து விரிந்து கிடக்கும் கஞ்சா வலைக்கட்டமைப்பின் வேரைக் கண்டறிந்து அகற்ற வேண்டும். கஞ்சா விளைவிக்கப்படும் இடங்களைக் கண்டறிந்து ஒழிக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா வருவதை தடுக்க வேண்டும்!


கஞ்சா விற்றதாகக் கைதாகி விடுதலை ஆனவர்கள் மீண்டும்  கஞ்சா விற்பது வாடிக்கையாகி விட்டது. இது தொடர்ந்தால் கஞ்சாவை ஒழிக்க முடியாது.  கஞ்சா விற்றதாக இரண்டாவது முறை கைதாவோருக்கு கடும் தண்டனையும், மூன்றாவது முறை கைதாவோரை குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்க வேண்டும்!


தமிழ்நாட்டில் இனி கஞ்சா இல்லை என்ற நிலையை கஞ்சா வேட்டை 3.0  உறுதி செய்ய வேண்டும். கஞ்சா விற்பனை குறித்து காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளிக்க வசதியாக  மூன்று இலக்க இலவச தொலைபேசி  அழைப்பு எண்ணை உருவாக்கி அறிவிக்க வேண்டும்’’.


இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தின் கஞ்சா சந்தையாக மாறி வரும் திருவண்ணாமலை 


ஏற்கனவே அதிகரித்து வரும் கஞ்சா பயன்பாடு குறித்துப் பேசி இருந்த ராமதாஸ், ''திருவண்ணாமலை மாவட்டம் தமிழகத்தின் கஞ்சா சந்தையாக மாறி வருகிறது. திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாமல் கிடைக்கிறது.  மலைப்பாதைதான் கஞ்சா சந்தையின் மையமாக  விளங்குகிறது. ஆனால், கஞ்சாவை கட்டுப்படுத்த எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. செங்கம் பகுதியில் பிஞ்சூர், செய்யாறு மேட்டுத்தெரு, வந்தவாசி கோட்டை, ஆரணி பையூர், தண்டராம்பட்டு தேரடி, கலசப்பாக்கம் பேருந்து நிலையம், போளூர் அல்லிநகரம், வேட்டவலம், ஜவ்வாது மலை போன்ற பகுதிகளில் 24 மணி நேரமும் கஞ்சா வணிகம் களை கட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் குறிப்பாக கஞ்சா வணிகத்தை ஒழிக்க ஓராண்டாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக காவல்துறை அறிவிப்பு செய்து வரும் போதிலும், அதனால் எந்த பயனும் இல்லை.  என்ன செய்தும் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லையே என மாவட்ட காவல் அதிகாரியே புலம்பும் நிலை  திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலவுகிறது. கஞ்சா வணிகம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில்  கொள்ளை, வழிப்பறி, குடும்ப வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன.  கொலைகள், தற்கொலைகள் அதிகரித்திருப்பதற்கும்  கஞ்சா வணிகம்தான் காரணம் என்பதை மறுக்கமுடியவில்லை. தமிழ்நாட்டை போதையின் பிடியிலிருந்து மீட்க வேண்டும்'' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.