அமைச்சர் பொன்முடியின் மேடைப் பேச்சுகளில் பல தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்மையில் சைவ- வைணவம் குறித்து அவர் ஆபாசமாகப் பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.


தந்தை பெரியார் திராவிடர் கழக மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதைக் குறிப்பிட்டு பட்டையா அல்லது நாமமா? என்ற கேட்டு அதற்கு கீழ்த்தரமான, கொச்சையான விளக்கம் ஒன்றைக் கொடுத்து இருந்தார்.


இது சர்ச்சையானதை அடுத்து, அமைச்சர் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  


நடந்தது என்ன?


சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையாய் வைத்திருப்பவர் அமைச்சர் பொன்முடி. இவர் பல்வேறு தருணங்களில் பேசியது சர்ச்சையானது.


குறிப்பாக, நலத்திட்ட விழா ஒன்றில், ’’பெண்களுக்கு அதான் ரூ.1000 கொடுக்கிறோமே’’ என்று அமைச்சர் பொன்முடி கூறியது சர்ச்சையானது.


ஓட்டுப் போட்டு கிழிச்சீங்களா?


இன்னொரு நிகழ்வில், ’’எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க..’’என்று அமைச்சர் பொன்முடி கூறி இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதேபோல மற்றோர் அரசு நிகழ்வில், ”ரூ.4000 வாங்குனீங்களா?” ”ஓசி பஸ்-ல போறீங்க!” என்று கேட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.




நீங்க எஸ்சிதானே?


தொடர்ந்து வேறொரு நிகழ்வில், ‘’இந்த ஊரின் சேர்மன் ஒரு பெண், அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’ என்று அமைச்சர் பொன்முடி கூறிய நிலையில், ’’நீங்க எஸ்சிதானே’’ என்று பொதுவெளியில் மைக்கில் எல்லோர் முன்னிலையிலும் கேட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது.


இதற்கிடையே ’’மூத்த நிர்வாகிகளின் பொறுப்பற்ற பேச்சு எனது தூக்கத்தைக் கெடுக்கிறது’’ என்று முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்திருந்தார். தொடர்ந்து, திமுக பொதுக்குழுவிலும், திமுக அதிகாரிகள் பார்த்துப் பேச வேண்டும் என எல்லோரையும் எச்சரித்து இருந்தார்.


ஆனாலும் அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சு அடங்காத நிலையில், அமைச்சர் பொன்முடியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த திருச்சி சிவா எம்.பி.க்கு, தற்போது துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.