கவின் சம்பவத்தில் சாதி கொலை செய்துள்ளதாகவும் திருப்புவனத்தில் சட்டம் கொலை செய்துள்ளதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
"செத்தாலும் தமிழனுக்கு ஜாதி போகாது"
பாளையங்கோட்டை கேடிசி நகரில் கடந்த 27 ஆம் தேதி கவின் என்ற ஐடி ஊழியர் காதல் விவகாரத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்படும் இளைஞர் சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலைப் பெற்றுக் கொள்வோம் என்று கடந்த நான்கு தினங்களாக கவினின் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஐந்தாம் நாளான இன்று உடலை வாங்க சம்மதம் தெரிவித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கவினின் உடலை பெற்று நல்லடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு ஏராளமான பொதுமக்களும் உறவினர்களும் கவினின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சீமான் தடாலடி கருத்து:
அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவினின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "எல்லா உயிரையும் நேசித்து வாழ்ந்த கூட்டம், தற்போது சக மனிதனை சாகடிப்பது வெட்டுவதுமாக மாறி உள்ளது.
இந்த தலைமுறை பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் போது அருவாளோடு செல்கிறது. பிஞ்சு நெஞ்சங்களில் சாதி நஞ்சு எப்படி உறியது. செத்தாலும் தமிழனுக்கு ஜாதி போகாது என்றால் இந்த சமூகத்தை ஒன்றுமே செய்ய முடியாது.
தமிழ்நாட்டில் திருநெல்வேலி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் தான் ஜாதி மோதல்கள் நடைபெறுகிறது. தமிழக அரசு சரியான சட்டம் இயற்றாது. இதனை செய்யாது. இங்கு சாதி கொலை செய்துள்ளது. திருப்புவனத்தில் சட்டம் கொலை செய்துள்ளது.
அஜித்தை கொலை செய்தது சட்டம். அவருக்கு ஏன் இவ்வளவு பேர் வரவில்லை? இங்கே ஏன் இவ்வளவு பேர் வருகிறார்கள். இரண்டு பக்கமும் வாக்கு. இரண்டு ஜாதி வாக்குகளும் வேண்டும் என அரசு துடிக்கிறது. அதற்காக இந்த வேலை செய்கிறது. இதில் வாக்குகளை பார்க்கலாமா?
நான் ஆட்சிக்கு வந்தால் இது நடக்கும் என நினைக்கிறீர்களா? ஒரு கொலை நடந்தாலே கொலை செய்தவனின் கல்விச்சான்றிதழ் செல்லாது, குடும்ப அட்டை கிடையாது, வாக்காளர் உரிமை கிடையாது, அவன் தலைமுறைக்கு அரசு வேலை கிடையாது என அனைத்தையும் நிறுத்தி விடுவேன். இப்படி நிறுத்திவிட்டால் தொடுவான் என நினைக்கிறீங்களா? அப்படி கொலை செய்தான் என்றால் ஜாதி பெருமையில் வாழ்ந்து கொள் என்று கூறிவிடுவேன்" என்றார்.