தேர்தல் களத்தில் அதிமுக

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தொகுதியாக மக்களை சந்திப்பது, மக்களின் குறைகளை கேட்டறிவது, அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அரசு மீதான விமர்சனம் என ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் போட்டி போட்டு மக்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவில் உட்கட்சி மோதலால் பல பிளவுகளால் பிரிந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என தனி அணியாக உள்ளது. அதிமுகவின் வாக்குகள் பிரிவதால் தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை பெற்று வருகிறது. 

Continues below advertisement

செங்கோட்டையன் நீக்கம்

எனவே பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து செங்கோட்டையன் பேசியிருந்தார். இதனால் அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்த நிலையில் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் கொங்கு மண்டலத்தில் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் கொங்கு மண்டலம் மட்டுமல்ல கோபிசெட்டிபாளையமும் தனது கோட்டையென நிரூபிக்க களத்தில் இறங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி, 

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி  'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு சட்டமன்றத் தொகுதி வாரியாக புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணம், கடந்த 7.7.2025 முதல் 10.10.2025 வரை, 174 தொகுதிகளில் தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இந்தச் சுற்றுப் பயணங்களின்போது, ஆங்காங்கே மக்கள் அலைகடலெனத் திறண்டிருந்து, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி எழுச்சிமிகு வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வுகள், அனைவரையும் பிரம்மிக்க வைத்தது.

Continues below advertisement

 

கோபிச்செட்டிபாளையத்தில் இபிஎஸ் பொதுக்கூட்டம்

இந்நிலையில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்துடனான புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின் தொடர்ச்சியாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம், முத்துமஹால் திருமண மண்டபம் அருகில், 30.11.2025 - ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில், நடைபெற உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.