சேலம் மாநகர் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மிக வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடு ஒரு வாரத்திற்குள் முடிவு ஏற்படும்.சிபிஎம் 2 இடத்தில் நின்றாலும் 40 தொகுதியும் எங்கள் தொகுதிதான். 40 பேரும் எங்களது வேட்பாளர் என்றே பணியாற்றுவோம். மேலும் பாஜக வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாட்டில் ஒரு வேட்பாளரை கூட அறிவிக்கவில்லை என்றால் வேட்பாளர் கிடைக்கவில்லை போல. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காமல் செய்வதே எங்களது இலக்கு" என்றார்.
தொடர்ந்து பேசிய பாலகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பேச்சில் நாகரிகம் கடைபிடிக்க வேண்டும் என்ற அவர், அரசியல் அனுபவம் இல்லாமல் பேசும் அண்ணாமலையால் தற்போது வரை கூட்டணியை உருவாக்க முடியவில்லை. ஆனால் மோடியை மட்டும் அடிக்கடி அழைத்து வந்து படம் காட்டுகிறார். எத்தனை முறை மோடியை அழைத்து வந்தாலும் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என்றார். மேலும் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் போட்டி அரசியல் நடத்தும் அளவிற்கு வந்துள்ளதாக தெரிவித்த பாலகிருஷ்ணன் கஞ்சா புழக்கத்தை தடுக்க அரசின் அறிக்கை மட்டும் போதாது போர்க்கால நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினார்.