அதிமுகவில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய செங்கோட்டையன், திடீரென டெல்லி சென்று அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு திரும்பினார். இந்நிலையில், தற்போது நிர்மலா சீதாராமன் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர் அதிமுக நிர்வாகிகளை சந்திப்பாரா.? முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Continues below advertisement

நிர்மலா சீதாராமன் சென்னை வருகை

மத்திய நிதி அமைச்சரும், பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான நிர்மலா சீதாராமன், வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது 14-ம் தேதி சென்னை வருகிறார். சென்னையில், ஜிஎஸ்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், பாஜக நிர்வாகிகளுடனும் கலந்துரையாடுவார் என கூறப்படுகிறது. அப்போது, பாஜக உட்கட்சி பூசல்கள் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்துவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அவர் அதிமுக நிர்வாகிகளையும் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால், சமீபத்தில் தான், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், டெல்லி சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்து, அரசியல் சூழல்கள் குறித்து பேசியதாக கூறினார்.

Continues below advertisement

அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒன்றுசேர்த்தால் மட்டுமே, தேர்தலை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்பதையும் அவர் எடுத்துச் சொல்லியிருப்பதாக கூறினார். அதனால், அது தொடர்பாக, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடமோ அல்லது எடப்பாடி பழனிசாமியிடமோ, நிர்மலா சீதாராமன் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

NDA-விலிருந்து விலகிய ஓபிஎஸ், டிடிவி தினகரன்

இது ஒருபுறமிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துவந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அக்கூட்டணியில் இருந்து விலகியுள்ளார். அமித் ஷா-வை சந்திக்க நேரம் கேட்டு, அது கிடைக்காத விரக்தியில் அவர் இந்த முடிவை எடுத்தார்.

இதேபோல், சமீபத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சரியான முறையில் கூட்டயை கையாளத் தெரியவில்லை என்ற பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தே, டிடிவி இந்த முடிவை அறிவித்தார்.

இதனால், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் பாஜக சமாதானம் செய்ய வேண்டியுள்ளது. இதுவும் நிர்மலாவின் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

டெல்லி சென்றுவந்த செங்கோட்டையன்

இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென டெல்லி சென்று, அமித் ஷா-வையும், நிர்மலா சீதாராமனையும் சந்தித்துவிட்டு வந்தார் செங்கோட்டையன். ஆனால், இந்த சந்திப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறிவிட்டார். மேலும், செங்கோட்டையனின் இந்த சந்திப்பபால், கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இத்தகைய நிலையில், நிர்மலா சீதாராமனின் சென்னை பயணம் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வாக மாறியிருக்கிறது. சென்னை வந்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.