தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு பள்ளிகளில் இலவச கல்வி, காலை மற்றும் உணவு திட்டம், இலவச பேருந்து பயணம், இலவச புத்தகம், புத்தகப்பை, கல்வி உதவித்தொகை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அதிலும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் இட ஒதுக்கீடு என பல சலுகைகள் வழங்கி வருகிறது. மேலும் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் என்ற திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் இலவச மிதிவண்டி
அந்த வகையில் நீண்ட தூரம் பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது. 2001-02ஆம் ஆண்டில் ஜெ. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ஆதி திராவிட மாணவிகளுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் 2005-06 ஆம் ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த 2025-26 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 5.34 லட்சம் மாணவ, மாணவியருக்கு ரூ.241 கோடி செலவில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் பல லட்சம் மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
அரசு மாணவர்களுக்கு மாடல் சைக்கிள்
அந்த வகையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு எப்போதும் Hero, Atlas, Avon, Hercules போன்ற பிரபல பிராண்டுகளின் மாடல்கள் tender அடிப்படையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் வழக்கமாக வழங்கப்படும் சாதாரண சைக்கிள்களுக்கு பதிலாக விலை உயர்ந்த ரக New 26T (Mountain Bicycles) வகை சைக்கிள்கள் வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இதனை தவெக ஆதரவாளர்கள் தங்களது பக்கங்களில் வெளியிட்டு கொண்டாடி வந்தனர். மாணவர்களின் கல்விக்காக தவெக அரசு புதிய மாடல் சைக்கிளை வழங்கி அசத்தி வருவதாகவும் கூறியிருந்தனர்.
கதை விட்ட தவெகவினர்- போட்டுடைத்த நெட்டிசன்கள்
இந்த நிலையில் தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அரசு சார்பாக வழங்கப்பட்ட சைக்கிள் இல்லையெனவும், தனியார் அமைப்பு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய சைக்கிள் என தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த வீடியோவானது கெங்கபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீபரமேஸ்வர் நினைவு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் வீடியோ என கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் கூறுகையில்,
பள்ளி மாணவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக இலவசமாக தனியார் அமைப்புகளின் உதவியோடு மிதி வண்டி இலவசமாக வழங்கி வருவதாகவும், இந்த சைக்கிள் அரசு சார்பாக வழங்கப்பட்டதில்லையெனவும் விளக்கம் அளித்துள்ளார். தனியார் பள்ளியில் தனியார் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டஉயர்ந்த ரக New 26T (Mountain Bicycles) வகை சைக்கிள்களை அரசு சார்பாக வழங்கப்பட்டதாக தவெகவினர் பரப்பி வருவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.
