மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நான்காவது நினைவுதினத்தை ஒட்டி அவர்குறித்து முன்னர் பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் ஒரு மேடையில் பகிர்ந்த சுவாரசியத் தகவல்கள்...


”கலைஞரின் பேனா எதில் எழுதினாலும் வரலாறு. நக்கீரனில் எழுதினாலும் சரி, விடுதலை, முரசொலி அல்லது ஒரு கோப்பில் எழுதினாலும் சரி அது வரலாறுதான். அவருக்கு எழுதுவதில் இருக்கும் அதே கவனம் தன்னைப் பற்றி வரும் எழுத்துகளிலும் இருக்கும். 90களில் எழுத்தாளர் பிரபஞ்சன் கருணாநிதியை கடுமையாக விமர்ச்சித்து ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தார்.அதற்கடுத்த சிலநாட்களில் கருணாநிதியை பேட்டியெடுக்க நான் சென்றேன். பிரபஞ்சனை வைத்துப் பேட்டியெடுக்கலாமா? எனக் கேட்டேன். கடுப்பாகி மறுத்துவிட்டார். இருந்தாலும் சற்று நேரத்துக்குப் பிறகு எனக்கு தொலைபேசியில் அழைத்து ’கேள்வியை எல்லாம் எழுதி அனுப்பச் சொல்லு நான் பதில் தர்றேன்’ எனக் கூறினார். தன்னை பற்றி எழுத்துகள் வருவதில் அத்தனை ஆர்வம் அவருக்கு. மற்றொரு சமயம் கோ.சி.மணி இல்லத் திருமணத்துக்கு கருணாநிதி செல்லும் வழியில் எதிர்ப்பாளர்கள் கருப்புக் கொடி காட்ட உள்ளார்கள் என நக்கீரனில் குறிப்பிட்டிருந்தோம். அதில் தேதி தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு அழைத்து,’கருப்பு கொடி காட்டுறதெல்லாம் இருக்கட்டும் அதை நான் வர்ற தேதியில் காட்டச் சொல்லு’ என நகைச்சுவையாகக் கூறினார். 



மற்றொரு சம்பவத்தில் சேலம் மாநாட்டுக்காக மிகப்பெரிய செட் போட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. கோட்டை வடிவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. கோட்டை வடிவம் என்பதால் ஆங்காங்கே கருப்பு தென்படும். அதை பதிவு செய்த எங்கள் துணை ஆசிரியர் ஆங்காங்கே தெரியும் கருப்பு கொள்கையில் வழுக்கல் இருப்பதைக் காண்பிக்கிறது என முடித்திருந்தார். நாங்கள் அனைவரும் போடாவில் கைது செய்யப்பட்டிருந்த காலத்தில் எங்களுக்காகப் போராடி விடுதலை வாங்கித் தந்தவர் கருணாநிதி.அவர் தன்னைப் பற்றி நன்றியில்லாமல் இப்படி எழுதிவிட்டார்களே என கொஞ்சம் வருந்தி ஒரே ஒரு வார்த்தைதான் பகிர்ந்தார், ‘உங்கள் நன்றிக்கு நன்றி!’ என்றார். எனக்கு செருப்பால் அடித்தது போல இருந்தது” என்றார்.


முன்னதாக, 
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. கட்சி தலைவருமான மு.கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 


ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்திருக்கும் கருணாநிதி சிலையில் தொடங்கி, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் மெரீனாவில் அமைந்திருக்கும் கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடத்தினர். 


கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, அரசினர் தோட்டத்தில் இருந்து மெரீனா வரை மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, ஆர்.ராசா., தயாநிதி மாறன், எம்.எல்.ஏ. உதயநிதி, அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.கே. சேகர் பாபு, உள்ளிட்ட பலரும் இந்த அமைதிப் பேரணியின் கலந்து கொண்டனர்.