துணை முதல்வராக வரவுள்ள உதயநிதி ஸ்டாலின் 100 கோடி ரூபாய் செலவு செய்து கார் ரேஸ் நடத்துகிறார். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் கொடுக்க நிதி இல்லை என்கிறார்கள் என கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.


 


 




கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”திமுக ஆட்சியில் தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகம்  மூன்றரை லட்சம் கோடி கடன்கார மாநிலமாக இருக்கிறது. பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகள் வராத நாளே கிடையாது. இதுதான் திமுக அரசின் சாதனை.


 


 




துணை முதல்வராக வரவுள்ள உதயநிதி ஸ்டாலின் கார் ரேஸ் நடத்துகிறார். கார் ரேஸ் நடத்த 100 கோடி ரூபாய் செலவு செய்து உள்ளனர். ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன் அளிக்க பணம் இல்லை என்கிறார்கள்” என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட அம்மா ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம்,  பெண்களுக்கு உதவி, தொகை மகப்பேறு தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம், இலவச மணிக்கணினி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தற்போது ஆளும் அரசு நிறுத்தி உள்ளது.


 




 


மேலும் தமிழகத்தில் மதுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி நடத்துகின்றனர். எங்கு பார்த்தாலும் கஞ்சா, மது உள்ளிட்ட தீய பழக்கத்தால் இளைஞர்கள் மிகவும் வாழ்வை இழந்து வருகின்றனர். அதேபோல் பொய் வழக்கை போடும் திமுக அரசு என் மீது தற்போது வரை 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் நான் சட்டப்படி வெற்றி பெறுவேன்” என கூறினார். மேலும், பேசுகையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிலையில் இருக்கும் நிலையில் அவரது சகோதரரை கடந்த ஒன்றை ஆண்டு காலமாக போலீசார் இன்னும் தேடி வருகின்றனர். இந்த நிகழ்வு வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.


 


 




மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்ட உதவிகள் எவ்வாறு பொதுமக்கள் பயன்பட்டனர் என பேசினார். வெங்கமேடு  நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பான ஏற்பாடுகளை வடக்கு நகரச் செயலாளர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேருகழக அதிமுக அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.