அண்மையில் நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பாஜக மூன்று மாநிலங்களைக் கைப்பற்றியது. அதில் மத்திய பிரதேசத்தில் ஆட்யில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதில் மத்திய பிரதேசத்தினை கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆட்சி செய்த சிவராஜ் சிங் சவுகானிடம் இருந்த ஆட்சி அதிகாரத்தினை, பாஜக மேலிடம் 58 வயது நிரம்பிய மோகன் யாதவிடம் வழங்கியுள்ளது. இது பாஜக வட்டாரத்தில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக வடக்கு மாநில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. 


யார் இந்த மோகன் யாதவ்?


இந்நிலையில் வரும் 13ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் புதிய முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள மோகன் யாதவ் யார் எனவும் அவரது அரசியல் பயணம் குறித்தும் இங்கு காணலாம். மோகன் யாதவ் மார்ச் 25, 1965 ஆம் ஆண்டு உஜ்ஜயினியில் பிறந்தார். இவரது தந்தை பெயர் பூனம்சந்த் யாதவ். சீமா யாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மோகன் யாதவ் BSC, LLB, MA, MBA மற்றும் PhD உள்ளிட்ட பட்டங்களை படித்துள்ளார். 


ஆர்.எஸ்.எஸ்.ல் தொடங்கிய பயணம்:


உஜ்ஜைன் மாவட்ட தெற்கு தொகுதியில் போட்டியிட்டு ஏறக்குறைய 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மோகன் யாதவ் தனது அரசியல் பயணத்தினை 1984ஆம் ஆண்டு அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) - இல் இருந்து தொடங்கியுள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் (RSS)  இவரது செயல்பாடுகள் இவரை செல்வாக்கு மிக்க தலைவராக மாற்றியது. 


2004 முதல் 2010 வரை உஜ்ஜைன் மேம்பாட்டு ஆணையம் மற்றும் 2011 முதல் 2013 வரை மத்திய பிரதேச மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் போன்ற குறிப்பிடத்தக்க அமைப்புகளுக்குத் தலைவராக பொறுப்பு வகித்து கட்சியில் நற்பெயரைப் பெற்றார். மாநிலத்தின் அரசியல் பரிச்சயமான முகமான மோகன் யாதவ், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்துள்ளார். குறிப்பாக கல்வி அமைச்சராக பணியாற்றியுள்ளார். 







 


பா.ஜ.க.வின் தேர்வு:


மோகன் யாதவ் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதியாகவும், நிர்வாக நுணுக்கங்களை நன்கு அறிந்தவராகவும் பாஜக உள்கட்சியினர் கருதுவதால் அவரிடம் முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. 2024 லோக்சபா தேர்தலுக்கு கட்சி தயாராகி வரும் நிலையில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, மாநிலத்தில் அதிகப்படியாக உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை பெறுவதற்காக எனவும் கூறப்படுகின்றது.


மேலும் 17ஆண்டுகள் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் அடுத்து அகில இந்திய அரசியலில் களமிறங்கவுள்ளதால், பாஜக மேலிடம் முதலமைச்சராக யாரைத் தேர்வு செய்யலாம் என யோசித்ததில் அவர்களின் தேர்வாக மோகன் யாதவ் இருந்துள்ளார். 


சிவராஜ்சிங் சவுகானிடம் ஆசி:


முதலமைச்சரை தேர்வு செய்யும் நிகழ்வில் மோகன் யாதவ் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானின் பாதங்களைத் தொட்டு வணங்கினார். இந்த நிகழ்வைப் பார்க்கும்போது கட்சியின் உயர்மட்டக்குழு ஏற்கனவே இந்த முடிவை எடுத்துவிட்டதாக கட்சியினர் மத்தியில் பேச்சுகள் அடிப்பட்டது.