திமுக துணைப்பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய கட்சியான காங்கிரசின் முகமாக திகழும் காமராஜரைப் பற்றி திமுக எம்பி இவ்வாறு பேசியது காங்கிரசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
இடம் கொடுக்க வேண்டாம்:
கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்! பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார்.
குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா. பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
சரியல்ல:
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு! அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
வீண் விவாதம் வேண்டாம்:
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு தமிழ்நாட்டில் நடக்க உள்ள நிலையில், திமுக தனது கூட்டணியை வலுவாக அமைக்க முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் திமுக கூட்டணியை பலவீனப்படுத்தவும், அவர்களது கூட்டணி கட்சியை தங்கள் பக்கம் இழுக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி சிவா காமராஜர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று கூறியது பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதை கருணாநிதியே கூறியதாகவும் அவர் கூறியது திமுக - காங்கிரஸ் உறவில் விரிசலை ஏற்படுத்தத் தொடங்கியது. தேர்தல் நேரத்தில் இந்த வீண் விவாதத்தை பெரிதுபடுத்துவது ஆரோக்கியமற்றது என்று மு.க.ஸ்டாலின் கருதுகிறார். முற்றுப்புள்ளி
இதன்காரணமாகவே, அவர் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த பதிவை பதிவிட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்த காமராஜர் இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பையே பெற்றவர். ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்து லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி பிரதமர் ஆவதற்கு முக்கிய பங்காற்றியவர்.
எளிமையின் சின்னமாக அடையாளம் காணப்பட்டு வரும் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்கமாட்டார் என்று கூறியதே காங்கிரசார் கொந்தளிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்கும், அணைகள் கட்டியதிலும் காமராஜரின் பங்கு அளப்பரியது.