மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
MK Alagiri Daughter Kayalvizhi: வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மதுரையைத் தன்வசப்படுத்த, மு.க. அழகிரியின் மகள் கயல்விழியை த.வெ.க-வில் இணைத்து மதுரை மேயர் வேட்பாளராக்க சுடச்சுட பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள நிலையில், இத்தனை ஆண்டுகாலமாக திமுகவுடன் பயணித்த கூட்டணி கட்சிகளும் தற்போது த.வெ.க பக்கம் சாய்ந்துள்ளன.. இத்தகைய இக்கட்டான சூழலில் திமுகவின் தென்மண்டல தளபதியாக இருந்தவரும், முக ஸ்டாலினின் அண்ணனுமான, மு. க. அழகிரியின் மகள் கயல்விழி தவெகவில் இணைந்து மதுரை மேயராக முயற்சிப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் திமுகவினர் மத்தியில் இடியை இறக்கியுள்ளது..
2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே ”திமுக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை குறைத்து மதிப்பிடுகிறது. விஜய் நிச்சயம் வாக்குகளை பிரிக்கப் போகிறார். திமுகவின் வெற்றி பல இடங்களில் பறிபோகப் போகிறது. யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத ஒரு நிலை கூட உருவாகலாம்” என்று சொன்னவர் தான் மு.க அழகிரியன் மகள் கயல்விழி.

”ராமருக்கே வனவாசம் 14 வருஷம் தான்”
மேலும் 2014ல் கட்சியை விட்டு நீக்கப்பட்ட மு.க. அழகிரியை ஏன் மீண்டும் சித்தப்பா ஸ்டாலின் திமுகவில் இணைத்துக் கொள்ள மறுக்கிறார்? ராமருக்கே 14 ஆண்டுகள் தான் வனவாசம். இன்னும் எத்தனை காலம் என் தந்தையை ஒதுக்கி வைக்கபோகிறீர்கள்? தேர்தல் நேரத்தில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள் அப்பா முடங்கிக்கிடப்பதை பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார் கயல்விழி.
”விஜய்யுடன் நெருக்கம் காட்டும் கயல்விழி”
இந்த சூழலில் தான் திமுகவினர் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, தேர்தல் ரிசல்ட் வந்ததும், முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் நேரடியாக சென்று பங்கேற்றார் கயல்விழி. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”நான் இங்கு முதல்வர் விஜய்யின் பதவியேற்பை பார்க்க வரல, ஒரு தங்கையா அண்ணனோட பதவி ஏற்பை பார்க்கிறதுக்காக வந்தேன்” என்றார். மேலும் அப்பாவுக்கும் விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்லியிருந்தார்.
அப்போது அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, தற்போதைக்கு எந்த அரசியல் கட்சியிலும் தான் சேரவில்லை, வரும் எண்ணமும் இல்லை என்று மறுத்திருந்தார். ஆனால் அதன் பிறகும் முதல்வராக விஜய் பதவியேற்ற பின் தலைமை செயலகத்திற்கு வந்தார் கயல்விழி. இது அனைத்துமே அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது.
”மு.க அழகிரியை இழுக்க தொடரும் முயற்சிகள்”
இந்நிலையில் நீண்ட காலமாகவே திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் மு.க அழகிரியை இழுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தபோது, மு.க. அழகிரியை அதில் இணைப்பதற்கான ஆலோசனைகள் நடந்ததாக தகவல்கள் வந்தன. மேலும் பாஜகவும் பல ஆஃபர்களை கொடுத்து அழகிரியை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாக செய்திகள் வந்தன. ஆனால் திமுகவை விட்டு நான் வேறெங்கும் வரமாட்டேன். அதே நேரம் நான் யாரிடமும் போய் பதவிக்காக நிற்க மாட்டேன் என்று வைராக்கியமாக இருந்தார் அழகிரி. மு.க.ஸ்டாலின் அழகிரியை சந்திக்க மதுரை வீட்டிற்கு வந்தபோது கூட தன்னை சேர்த்துக்கொள்ள வேண்டும், தனக்கு பதவி வழங்க வேண்டும் என்று கேட்காத அழகிரி தன்னுடைய ஆதரவாளர்களை மட்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்தார். ஆனால் அது எதுவுமே நடைபெறாமல், அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இணையும் சம்பவங்கள் நடைப்பெற்றது.
ALSO READ | ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
”குடும்பத்தில் OK.. கட்சியில் NO”
தயாநிதி அழகிரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த போதுக்கூட, முதல் ஆளாக திமுக தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் நேரடியாக வந்து சந்தித்தனர். அந்த வகையில் குடும்பமாக ஸ்டாலினும், அழகிரியும் கசப்புகளை மறந்து காட்சியளித்தாலும், கட்சி ரீதியாக அழகிரியையோ அல்லது அழகிரியின் ஆதரவாளர்களையோ கட்சியில் இணைக்க முக ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவில்லை. இந்த சூழலில் தான் தவெகவில் இணைய கயல்விழி விரும்புவதாகவும், குறிப்பாக மதுரை மேயர் பதவிக்கு கயல்விழி காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கூடிய விரைவில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சி தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று கட்சியை கடை கோடி வரை எடுத்து செல்ல தவெக மும்மரமாக திட்டங்களை தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரையில் கோலோச்சிய அழகிரியன் மகளுக்கு மேயர் பதவி கொடுக்கவும் தவெக தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான் அழகிரியின் பர்மிஷனுக்காக கயல்விழி காத்திருப்பதாகவும் தவெகவில் இணைந்து போட்டியிட தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது தமிழக அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















