சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடத்திய, இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஜாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த எழிலரசன், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த காயத்ரி இருவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் மாலைகளை வழங்கினார். பின்னர் மலர்மாலையை மாற்றிக்கொண்டு, இரண்டு வீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதைதொடர்ந்து விழாவில் பேருரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இரண்டு தலைப்புகள் திராவிட இயக்க வரலாறு, மாநில சுயாட்சி ஆகியவை தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பயிற்சி பாசறை நடத்தி முடித்துவிட்ட நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவு வாங்கி ஒவ்வொரு ஒன்றியங்களாக தமிழகம் முழுவதும் சென்று பயிற்சி பாசறை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திராவிடக் கொள்கையில் பிடிப்பு உள்ளவனாக, பகுத்தறிவாளானாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன், அமைச்சராக கலந்து கொள்ளவில்லை. கலைஞர் இளமை காலத்தில் சேலத்தில் இருந்தபோது சென்னை மாகாணம், இப்போது கலைஞரின் பேரன் என் காலத்தில் தமிழ்நாடு, நமது பேரன், பேத்தி காலத்தில் தமிழ்நாடாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் மாநாடு நடைபெற்று வருகிறது.
ஆனால் தமிழக முதல்வர் பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்டம், ஜாதகம் சரியில்லை என்றும், தமிழகத்திற்கு முதல்வரே ஆக முடியாது என்றும் கூறினார்கள். இதற்கு தனது உழைப்பால் தகடு பொடியாக்கி வென்றுகாட்டி, நாடு போற்றும் திராவிட மாடல் அரசை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு இன்னும் சிறப்பு என்றால், மற்ற மாநிலத்தில் உள்ள கட்சிகள் எல்லாம் ஒன்றியத்தை ஆளுகின்ற பாசிசவாதிகள் அரசியல் எதிரிகள், ஆனால் தமிழகத்திற்கு மட்டும் தான் கொள்கை எதிரிகள் என்றும் கூறினார். எவ்வளவோ முயன்று பார்க்கிறார்கள், அதிக செலவு செய்து பார்க்கிறார்கள், என்னென்னவோ வியூகங்கள் வகுத்து பார்க்கிறார்கள், மாநில தலைவர்களை எல்லாம் ஆட்டி பார்க்கிறார்கள், இருந்தாலும் பாசிச சக்திகளால் தமிழகத்தில் அடியெடுத்து வைக்க முடியாது. அவர்களின் கண்ணுக்கு தெரியாத தடுப்புசுவர் பாதுகாத்து வருகிறது. அந்த சுவற்றில் மோதி மூக்குடைந்து கிடக்கிறார்கள்.
அந்த சுவரின் பெயர் தான் தந்தை பெரியார் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் இயக்கத்தை பெரியார் ஆரம்பித்தபோது தமிழகத்தில் பெரும்பாலான பெயருடன் ஜாதி பெயர் இருந்தது. ஆனால் 1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார் மறைவுக்குப்பிறகு தமிழகத்தில் யாருடைய பெயருக்கு பின்னாலும் ஜாதி பெயர் கிடையாது. பெரிய சாதனையை பெரியார் நிகழ்த்திக் காட்டினார். ஜாதி பெயர் போட்டுக் கொள்ளாத மக்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட 50 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது. வேகமாக வளர்கிறது. இதனால்தான் அறிஞர் அண்ணா பெரியாரை ஒரு சகாப்தம் என்று கூறினார். தமிழகத்தில் அரசியல் செய்வது என்பது சங்கிகளுக்கு எளிதான காரியம் அல்ல, பெரியார் இறந்து 50 ஆண்டுகள் ஆகியும் தமிழகத்தின் அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளார். இதற்கு தந்தை பெரியாரும், அவருடைய பேச்சுக்களும் தான் என்றும் தெரிவித்தார். அண்ணா காலத்தில் மட்டுமல்ல தமிழக முதல்வர் ஸ்டாலின் காலத்திலும் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று பல காரணங்களை கண்டுபிடிக்கிறார்கள், ஏனென்றால் தமிழ்நாடு என்ற பெயர் அவர்கள் கண்களை தொந்தரவு செய்கிறது. தமிழ்நாடு என்ற பெயர்தான் தமிழ் மக்களை தேசிய இனம் என்ற உணவை ஏற்படுத்துகிறது. திமுக ஆட்சியின் போது எமர்ஜென்சி கடுமையாக எதிர்த்தவர் கருணாநிதி, அப்பொழுது தமிழ்நாடு தனித்தீவாக உள்ளது என்று இந்திராகாந்தி தெரிவித்தார். எமர்ஜென்சி காலத்தில் மாநில கட்சிகள் தடை செய்யப்படும் என்ற செய்தியும் வந்தது. அப்போது அதிமுக, அஇஅதிமுகவாக மாறியது.
ஆனால் திமுக அப்போதும் சரி, இப்பொழுதும் சரி. திமுகவாகவே திமுக இருந்து வருகிறது. அதிமுக அப்பொழுதும் டெல்லி என சொல்கிறதோ அதைக் கேட்டு நடந்தது, இப்பொழுது டெல்லி என்ன சொல்கிறதோ அதைகேட்டு தான் நடந்துகொண்டு வருகிறது என்று விமர்சனம் செய்தார். ஆனால் திமுக மாநில உரிமைகள் பறிபோகும்போது அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி குரல் கொடுத்து வருகிறது என்றும் கூறினார். சமூக நீதிக்கு ஆபத்து என்றால் அதற்கான முதல் குரல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குரலாக இருக்கிறது என்றார். மேலும் தேர்தல் அரசியல் ஈடுபடாத பல திராவிட இயக்கங்கள் தனி தனியாக இயங்கி வருகிறது. அனைவரும் ஒற்றுமையுடன் ஒன்றாக இருந்து திராவிட மாடல் அரசை வழிநடத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கை என்றும் பேசினார்.