இனி புயல், மழை, வெள்ளம் என எதற்கும் பயம் இல்லை - பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டிய அமைச்சர்...!
பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடத்தினை, பேரிடர் அல்லாத காலங்களிலும் பெரும்பாலான நாட்களில் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழை வெள்ள காலங்களில் பெரிதும் பாதிக்இப்படும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு 16 கோடியில் புதிய பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையம் கட்டும்பணி தொடங்கப்பட்டுள்ளது.
பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட திருமயிலாடி மற்றும் முதலைமேடு கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தலா 7.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டுதல் மற்றும் சீர்காழி வட்டம் புளிச்சக்காடு கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மன நலக் காப்பகக் கட்டிடம் கட்டுதல் என மொத்தம் 21 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் பேச்சு
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்; தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட திருமயிலாடி மற்றும் முதலைமேடு கிராமங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தலா ரூபாய் 7.92 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டுதல், சீர்காழி வட்டம் புளிச்சக்காடு கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் மன நலக் காப்பகக் கட்டிடம் கட்டுதல் என மொத்தம் 21 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் பொறுப்பு அமைச்சர்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நான் பொறுப்பு அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், இப்பகுதியினை பார்வையிட வந்த போது, இப்பகுதி மக்கள் சாலை வசதி வேண்டி கோரிக்கை வைத்தார்கள். அந்த வகையில் இப்பகுதி மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, பிரதம மந்திரி சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இப்பகுதியில் 6.5 கி.மீ சாலை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை அமைப்பதற்கான இடம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மூலம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு சாலை அமைக்கும் பணி விரைவாகத் தொடங்கப்பட உள்ளது.

ஆறுமாத காலம் கெடு
மேலும், தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையக் கட்டிடம் கட்டும் பணிகளும் இன்னும் ஆறுமாத காலத்திற்குள் முடிக்கப்படும். இக்கட்டிடத்தில், போதுமான குடிநீர் வசதி மற்றும், கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், பெரிய சமையலறையுடன் அமைக்கப்பட்டுள்ளதால், பேரிடர் காலங்களில் இங்கு தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பணியினை மேலும் துரிதமாக மேற்கொள்ள இயலும். பேரிடர் காலங்களில், மக்கள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளையும் இக்கட்டிடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
அறிவுறுத்திய அமைச்சர்
இந்த பல்நோக்கு மையக் கட்டிடத்தினை, பேரிடர் அல்லாத காலங்களில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துதல் மற்றும் இப்பகுதி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துதல் போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஓர் ஆண்டில் பெரும்பாலான நாட்களில் இப்பல்நோக்கு மைத்தினை பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

புதைவடக் மின்கம்பி திட்டம்
வடகிழக்கு பருவமழைக் காலங்களில் இப்பகுதியானது அதிக பாதிப்புகளை சந்திப்பதை கருத்தில் கொண்டு அதற்கு தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இப்பகுதியில் உள்ள துணை மின்நிலைநிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில், மின் கம்பங்கள் அல்லாமல், முற்றிலும் புதைவடக் கம்பிகளாக மாற்றப்படவுள்ளது. இவ்வாறு இப்பகுதி மக்களின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்தார்.
பங்கேற்பாளர்கள்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை தாங்க, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) முகம்மது ஷபீர் ஆலம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் நா.உமாமகேஷ்வரி, சீர்காழி நகராட்சி ஆணையர் மஞ்சுளா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமார், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சீர்காழி நகர்மன்றத் துணைத்தலைவர் சுப்புராயன், கொள்ளிடம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயபிரகாஷ், மற்றும் அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.






















