புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக வடக்கு மாவட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் ரகுபதி, அமைச்சர் மெய்யநாதன்  ஆகியோரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக வட்டச் செயலாளர் மற்றும் திமுகவினர், திமுக மாநகர பொறுப்பாளரை மாற்றுமாறு வலியுறுத்தி, கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

புதுக்கோட்டை வடக்கு திமுக மாநகரச் செயலாளர் நியமனத்தில் பிரச்னை

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மாநகர செயலாளராக இருந்த செந்தில், கடந்த டிசம்பர் மாதம் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவர், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவர் ஆவார்.  இந்நிலையில், அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த திமுக மாநகரச் செயலாளர் பதவி இன்று வரை காலியாக உள்ளது.

இந்நிலையில், அந்த பதவிக்கு திமுக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகள் பலர், திமுக கட்சி தலைமையிடம் தங்களுக்கு அந்தப் பதவி தர வேண்டும் என்று தங்களது ஆதரவாளர்களோடு கேட்டுக் கொண்டிருந்தனர். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவின் ஆதரவாளரான ராஜேஷ் என்பவரை, திமுக கட்சித் தலைமை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாநகர பொறுப்பாளராக அறிவித்தது. 

Continues below advertisement

பொறுப்பாளர் நியமனத்தை எதிர்த்து திமுகவினர் தொடர் போராட்டம்

இந்நிலையில், கட்சிக்காக உழைத்த பல மூத்த உறுப்பினர்கள் திமுகவில் உள்ள நிலையில், இந்த பொறுப்பை ராஜேஷுக்கு வழங்கியதால், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 3 மாதங்களாக, திமுக கூட்டம் எங்கு நடந்தாலும், அங்கு செல்லும் புதுக்கோட்டை மாநகராட்சி வட்டச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மாநகர பொறுப்பாளர் ராஜேஷை மாற்ற வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட வருகின்றனர். 

அமைச்சர்களை வழிமறித்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள்

இந்த சூழலில் தான், இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திமுக வடக்கு மாவட்ட BLA & BDA கூட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் ரகுபதி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரை வழிமறித்த திமுக வட்ட கழக செயலாளர்கள் மற்றும் திமுகவினர், திமுக மாநகர பொறுப்பாளரை மாற்ற வலியுறுத்தி, கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அமைச்சர் கே.என். நேருவோடு கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு, அவரை கூட்டத்திற்கு உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். இச்சூழலில், அமைச்சர் கே.என். நேரு தொண்டர் ஒருவரை அடிக்க முயன்றதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்திலிருந்து திமுகவினர் வெளிநடப்பு

பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய அமைச்சர்கள், உள்ளே வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்று தெரிவித்த நிலையில், 3 மாத காலமாக இதையே தான் சொல்கிறீர்கள், ஆனால் தீர்வு கிடைக்கவில்லை என்று திமுகவினர் தங்கள் அதிருப்தியை அமைச்சர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினர். மேலும், உடனடியாக மாநகர பொறுப்பாளர் ராஜேஷை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களது கோரிக்கைகளை வலுவாக முன்வைத்து, கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்குள் இருந்து வெளிநடப்பு செய்து, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு சென்ற அமைச்சர்களை, அவர்களது சொந்தக் கட்சியினரே முற்றுகையிட்டு, தடுத்து நிறுத்திய சம்பவத்தால், திமுகவின் உட்கட்சி பூசல் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதையெல்லாம் சரி செய்யாமல், தேர்தல் வேலைகளில் ஈடுபட்டால் மட்டும் வாக்குகள் வந்துவிடுமா என்று திமுக தொண்டர்களே கேள்வி எழுப்புகின்றனர்.