தவெக ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருபவர் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா. அமைச்சராக ஆனபின்னரும் அதுவும் தமிழ்நாட்டின் கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய துறையான தொழில்துறையை கையில் வைத்திருக்கும் நிலையிலும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் அப்லோட் செய்வதிலேயே அதீத ஆர்வம் காட்டி வருகிறார் என்ற விமர்சனங்களும் அவரை பின் தொடர்ந்தே வந்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யவிருந்த தொழில்நிறுவனங்கள் ஆந்திராவை நோக்கிச் செல்வதற்கு காரணம் கீர்த்தனா தான், என திமுக முன் வைத்த குற்றச்சாட்டுகள் பல நாட்கள் பற்றி எரிந்துகொண்டிருந்தன. இப்போது அரசு பள்ளியில் ஆய்வு செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டிருப்பதும் கடுமையான கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருக்கின்றன.
பொறுப்பற்ற முறையில் செயல்படும் அமைச்சர் கீர்த்தனா
பொறுப்பாக இருக்க வேண்டிய ஒரு அமைச்சர் பொறுப்பற்ற நிலையில், அரசு பள்ளி மாணவியை வீடியோ எடுத்து பொதுவெளியில் விட்டிருப்பதும், ஆய்வுக்கு செல்கிறேன் என்ற பெயரில் கேமராவோடு பள்ளி வகுப்பறைகளுக்கு சென்று 360 டிகிரியில் சுற்றி, சுற்றி வீடியோ எடுத்து பள்ளி மாணவர்களை வைத்து பப்ளிசிட்டி தேடுவதும், தற்போது அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாணவி மன உளைச்சலுக்கு உள்ளானால் யார் பொறுப்பு ?
ஆங்கிலம் சரளமாக பேச முடியாமல் தவிக்கும் மாணவியின் முகத்தை படம் பிடித்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, பிரபல்யம் தேடுவதெல்லாம் ஒரு அமைச்சருக்கு அழகுதானா? என்றும் இந்த வீடியோவை பார்க்கும் அந்த மாணவியின் மனநிலை எப்படி இருக்கும்? ஒருவேளை இந்த வீடியோவை பார்த்து மற்ற மாணவர்களும், ஊரில் உள்ளோரும் அந்த மாணவியை கிண்டல் செய்து, அது அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினால் அதற்கு யார் பொறுப்பு ? எனவும் சமூக வலைதளங்களில் அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக கடுமையான எதிர்வினைகளை ஆற்றிவருகின்றனர் நெட்டிசன்கள்.
குறைந்தப்பட்ச பக்குவம் கூட இல்லாதவரா அமைச்சர் கீர்த்தனா?
அதே நேரத்தில், குறைந்தப்பட்ச பக்குவம் கூட இல்லாமல் ‘லாஸ்ட் பெஞ்ச் பசங்ககிட்ட கேட்டா இது கூட தெரியாது’ என்று அமைச்சர் கீர்த்தனா பேசியிருப்பது அவரின் ஆளுமை மீதான பெரிய கேள்வியை எழுப்பியிருக்கிறது. பள்ளி மாணவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று கூட தெரியாத அமைச்சர் கீர்த்தனா, தொழில்துறையினரிடம் எப்படி பேசி முதலீடுகளை கொண்டுவருவார் என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ள நெட்டிசன்கள், தன்னை பெரிய பன்மொழி வித்தகராக நினைத்துக்கொண்டிருக்கும் அமைச்சர் கீர்த்தனா, அதை காட்ட வேண்டியது தொழில் நிறுவன அதிபர்களிடம்தானே தவிர, அரசு பள்ளி மாண, மாணவிகளிடம் இல்லை என்றும் விமர்சித்திருக்கிறார்கள். இதை, யாராவது எடுத்துக் கூறினால் கூட கீர்த்தனாவால் புரிந்துகொள்ள முடியுமா என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீடியோ போடுவாரா ?
தமிழ்நாட்டில் ஏன் விருதுநகர் மாட்டத்திலேயே எத்தனையோ தனியார் பள்ளிகள் இருக்கின்றன. தமிழில் பேசினால் ஃபைன் போடும் விதிமுறைகள் இருக்கிறது. அங்கெல்லாம் சென்று, அங்கு படிக்கும் மாணவர்களிடம் சரளமாக தமிழில் பேசச் சொல்லி கேட்பாரா அமைச்சர் கீர்த்தனா? அப்படிதான் அவரால் கேட்க முடியுமா? என்ற கேள்விகளையெல்லாம் எழுப்பியிருக்கும் நெட்டிசன்கள், அமைச்சர் கீர்த்தனாவின் தாய்மொழியே தமிழ் இல்லாதபோது அவர் எப்படி தமிழில் பேசச் சொல்லி கேட்பார் என்றும் விமர்சித்திருக்கின்றனர்.
தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள் – அன்பில் மகேஸ் அட்வைஸ்
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிற முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ‘மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள். தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்’ என குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் எம்.எல்.ஏ-வாக பதவியேற்பதற்கு வெற்றிச் சான்றிதழை சட்டப்பேரவைக்கு எடுத்து வர வேண்டும் என்பது கூட தெரியாமல் இருந்த கீர்த்தனாதான் இன்று அமைச்சர் ஆகி மாணவ, மாணவிகளிடம் ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியுமா? என கேள்விக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்.
