(Source: ECI | ABP NEWS)
பொங்கல் பரிசு: நவம்பர் 15 முதல் இலவச வேட்டி, புடவை விநியோகம்! அமைச்சர் காந்தி அறிவிப்பு, பட்டு சேலைகளில் மாற்றம்?
"காஞ்சிபுரம் முருகன் கூட்டுறவு சங்க விற்பனை நிலையம் புதுப்பொலிவுடன் அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்"

உண்மையான பட்டு சேலை கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே கிடைக்கிறது ஜரிகையில் தங்கம், வெள்ளியைக் குறைக்க ஆலோசனை நடைபெற்ற வருவதால் காஞ்சிபுரத்தில் அமைச்சர் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம்
பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் 30-க்கும் மேற்பட்ட பட்டுப் புடவை உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் முக்கியமான ஒன்றான முருகன் கூட்டுறவு சங்கம், அதன் விற்பனை நிலையத்தை என்னைக்கார தெருவில் உள்ள சொந்த இடத்தில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்தை, தமிழக கைத்தறி மற்றும் நெசவாளர் துறை அமைச்சர் ஆர். காந்தி குத்துவிளக்கு ஏற்றித் துவக்கி வைத்து, தொடர்ந்து ரிப்பன் வெட்டி முதல் வியாபாரத்தைத் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நவம்பர் 15 முதல் இலவச வேட்டி - புடவை
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் மிகவும் தரமாக இருப்பதால் அனைவரும் கட்டி மகிழ்வதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த ஆண்டுக்கான பொங்கல் வேட்டி சேலைகள் நவம்பர் 15-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கூட்டுறவு சங்கங்களில் உண்மையான பட்டு புடவை
மேலும், கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுகள்தான் உண்மையான பட்டு என்றும், தாங்கள் உத்திரவாதத்துடன் (கேரண்டி) விற்பனை செய்வதாகவும் கூறினார். தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வதால், பட்டுச் சேலைகளின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம் மற்றும் வெள்ளியைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மழை காரணமாக இதுவரை நெசவாளர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த அமைச்சர், தி.மு.க. ஆட்சியில் நெசவுத் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு ₹800 கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தற்போது நெசவாளர்களுக்கு ₹800 முதல் ₹1500 வரை கூலி கிடைப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
லாபத்தில் கோஆப்டெக்ஸ் நிறுவனம்
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அ.தி.மு.க. ஆட்சியில் பத்தாண்டுகளில் 9 ஆண்டுகள் நஷ்டத்தில் இயங்கிய நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ₹9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகவும், 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் அதிகரித்து கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும் அமைச்சர் காந்தி விளக்கினார்.





















