மயிலாடுதுறை தீமிதி திருவிழாவில் பரபரப்பு: தவெக கொடியுடன் தீக்குண்டத்தில் இறங்கிய இளைஞரால் சலசலப்பு..
மயிலாடுதுறையில் தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் இளைஞர் ஒருவர் தவெக (TVK) கொடியுடன் தீக்குண்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றான தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயத் தீமிதி திருவிழா, நேற்றிரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. 134-வது ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில், 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் உச்சகட்டமாக இளைஞர் ஒருவர் அரசியல் கட்சி கொடியுடன் தீக்குண்டத்தில் இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடன்கட்டை ஏறிய பெண்ணின் வரலாறு
மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயம், வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது ஒரு தியாகத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கணவனை இழந்த பெண்மணி ஒருவர், தனது கணவரின் சிதையில் தீப்பாய்ந்து உடன்கட்டை ஏறியதாக வரலாறு கூறுகிறது.
அவரது அசாத்தியமான பக்தியையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், அப்பகுதி மக்கள் அவரை தெய்வமாக பாவித்து 'தீப்பாய்ந்தாள் அம்மன்' என பெயரிட்டு சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் மாசி மாதத்தில் இக்கோயிலில் நடைபெறும் தீமிதி திருவிழா, மாவட்டத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
சக்தி கரகம் மற்றும் வீதி உலா
134-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நேற்று காவிரி ஆற்றங்கரையில் உள்ள புகழ்பெற்ற நாலுகால் மண்டபத்தில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டது. கடும் விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், அம்மனுக்கு உகந்த மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து 'ஓம் சக்தி, பராசக்தி' என்ற முழக்கத்துடன் ஊர்வலத்தில் இணைந்தனர்.
சில பக்தர்கள் தங்கள் உடலில் அலகு குத்தியும், பல்வேறு உருவங்களைக் கொண்ட அலகு காவடிகளை ஏந்தியும் மேளதாள வாத்தியங்கள் முழங்க நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள், பக்தர்களுக்குத் தண்ணீர் வழங்கியும், அம்மனை வணங்கியும் உற்சாகப்படுத்தினர்.
பரபரப்பை ஏற்படுத்திய தவெக கொடி
பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்ததும், அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீமிதிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. சுமார் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அனல் கக்கும் தணலில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நிகழ்ச்சி சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அப்போது பக்தர்களின் ஒருவரான இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியைக் கையில் ஏந்தியபடி தீக்குண்டத்தில் இறங்கி தீ மித்தார். புனிதமான ஆன்மீக நிகழ்வில் அரசியல் கொடியுடன் இளைஞர் புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள் மற்றும் அங்கிருந்த பக்தர்கள், உடனடியாக
அவரது கையில் இருந்த கொடியைப் பிடுங்கியதுடன், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சிலர் அந்த இளைஞரைத் தாக்க முற்பட்டனர். இதனால் கோயில் வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது. பின்னர் காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த பெரியவர்கள் தலையிட்டு சூழலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். "ஆன்மீகத் திருவிழாக்களில் அரசியல் அடையாளங்களைத் தவிர்ப்பதே முறை" என கோயில் நிர்வாகத் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
பக்திப் பெருக்கு மற்றும் அன்னதானம்
பரபரப்புகளுக்கு மத்தியிலும், பக்தர்களின் பக்திப் பெருக்கு குறையவில்லை. ஏராளமான பெண்கள் மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபட்டனர். "இந்த அம்மனிடம் வைக்கும் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதற்காகவே ஆண்டுதோறும் தீமிதித்து எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்," என்று உள்ளூர் பக்தர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விழாவிற்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. 134-வது ஆண்டு தீமிதி திருவிழா சில சலசலப்புகளுடன் நிறைவு பெற்றது.
























