தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் மற்றும் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ ஆகிய கோரிக்கைகளை முதல்வர் விஜய் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Continues below advertisement

இது தொடர்பாக, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் விடுத்துள்ள விரிவான அறிக்கை மற்றும் கோரிக்கைகளின் விபரம் பின்வருமாறு;

தேர்தல் வாக்குறுதி

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக, தமிழகத்தில் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருக்கும் தற்காலிக ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தவெக தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

Continues below advertisement

அதன்படி, தற்காலிகமாகப் பணியாற்றும் ஆசிரியர்களில் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அனைவரும் தகுதிவாய்ந்த நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என்றும், அவர்கள் தற்காலிக ஆசிரியர்களாகப் பணியாற்றும் காலத்திலும் கூட, நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக ‘சம வேலைக்கு சம ஊதியம்’ பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தங்களின் எதிர்காலத்தை ஒளிரச்செய்யும் இந்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய் உடனடியாக அரசாணையாக வெளியிட்டு நிறைவேற்ற வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

16 ஆண்டுகாலத் துயரம்: 11,773 குடும்பங்களின் பரிதவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகையான அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் கணினி, தையல் போன்ற தொழிற்கல்விப் பாடங்களை நடத்தும் பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக மிகக் குறைந்த தொகுப்பூதியத்தில் தற்காலிகமாகப் பணியாற்றி வருகிறார்கள்.

தற்போது மாநிலம் முழுவதும் மொத்தம் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த விதவைப் பெண்கள் மற்றும் ஏழை எளிய விளிம்புநிலை விவசாயத் தினக்கூலி குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இதில் பெருமளவில் உள்ளனர்.

"ஏற்கனவே தற்காலிகப் பணியால் 15 ஆண்டுகளுக்கும் மேலான தங்களது இளமைக் கால வாழ்க்கையை இழந்து 11,773 குடும்பங்கள் வறுமையில் பரிதவித்து நிற்கின்றன. தவெக ஆட்சியிலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றத் தாமதம் செய்தால், அது இக்குடும்பங்களை மேலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும். இவர்களில் பலர் தற்போது ஓய்வு பெறும் வயதை நெருங்கிவிட்டதால், கால அவகாசம் இன்றி அரசு விரைந்து செயல்பட வேண்டும்" என்று சி.செந்தில்குமார் கவலை தெரிவித்துள்ளார்.

ஊதிய முரண்பாடும் வாழ்வாதாரப் போராட்டமும்

தற்போது அரசுப் பள்ளிகளில் ஒரே மாதிரியான பாடங்களை நடத்தும் ஆசிரியர்களிடையே கடுமையான ஊதிய முரண்பாடு நிலவி வருகிறது. உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்விப் பாடங்களில் காலமுறைச் சம்பள விகிதத்தில் சிறப்பாசிரியர்கள் பணியாற்றி வரும் அதே வேளையில், அதே பணிகளைச் செய்யும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வெறும் 15,000 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

ஒரே தகுதியுடன், ஒரே பள்ளியில், ஒரே பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு இடையே நிலவும் இந்த ஊதியப் பாகுபாட்டைத் களைய வேண்டும். ஒரே பாடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு "ஒரே மாதிரியான சம்பளம்" வழங்கப்பட வேண்டும். அதற்கு தவெக-வின் கொள்கை முழக்கமான 'சம வேலை சம ஊதியம்' என்ற தேர்தல் வாக்குறுதியே சரியான தீர்வாகும்.

அமைச்சரவையின் கொள்கை முடிவாக எடுக்க கோரிக்கை

பகுதிநேர ஆசிரியர்களின் இந்தப் பணிநிரந்தரக் கோரிக்கையானது ஒரு மாவட்ட அளவிலான அதிகாரியோ அல்லது துறைச் செயலாளர்களோ தனித்து எடுத்து முடிக்கும் சாதாரணப் பிரச்சினை அல்ல. அரசின் கொள்கை சார்ந்த முடிவை மட்டுமே அதிகாரிகள் செயல்படுத்த முடியும்.

எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் அவர்கள் நேரடியாகத் தலையிட வேண்டும். 11,773 தற்காலிகப் பணியிடங்களையும் முழுமையாக நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அரசே ஏற்க வேண்டும். இதனை அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet) கொள்கை முடிவாக எடுத்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியுள்ளது.

பதவி உயர்வுடன் கூடிய தீர்வு

வறுமையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் இத்தகைய பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றவும், அவர்களுக்கு முறையான வாழ்வாதாரப் பாதுகாப்பை வழங்கவும் அரசுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை கூட்டமைப்பு வழங்கியுள்ளது. தற்போது தற்காலிகமாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு (Promotion) வழங்கி, அவர்களை முழுநேர 'சிறப்பாசிரியர்களாக' (Special Teachers) நியமிக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்களுக்கான கல்வியும் தடையின்றி கிடைப்பதுடன், ஆசிரியர்களின் வாழ்விலும் ஒளிவீசும் என்பதால் முதல்வர் இதற்கு உடனடியாக ஆவன செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் உருக்கமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.