INDIA கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவா? ஒரே போடு போட்ட மம்தா பானர்ஜி.. செம்ம ட்விஸ்ட்!
தேர்தலுக்கு பிறகு INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்டது.
மம்தா வைத்த செம்ம ட்விஸ்ட்:
தென்மாநிலங்களில் INDIA கூட்டணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல, வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மாநிலங்களில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்குவங்கத்தை பொறுத்தவரையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மம்தா பானர்ஜியின் கோட்டையாக திகழ்கிறது. அம்மாநில முதலமைச்சராகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள மம்தா, INDIA கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும் மேற்குவங்கத்தில் தனித்தே போட்டியிட்டார்.
காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் INDIA கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக தேர்தலை சந்தித்தன. இது, INDIA கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால், தனித்தனியே போட்டியிட்டாலும் INDIA கூட்டணியில் தொடர்வதாக மம்தா கூறியிருந்தார்.
"INDIA கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு"
தேர்தலுக்கு பிறகு INDIA கூட்டணி ஆட்சி அமைத்தால் வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என மம்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "இந்திய கூட்டணிக்கு நாங்கள் வழிகாட்டுவோம். வெளியில் இருந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவுவோம்.
மேற்கு வங்காளத்தில் எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் ஒரு போதும் பிரச்னையை சந்திக்காமல் இருக்கவும், 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் இருக்கவும் நாங்கள் ஒரு அரசாங்கத்தை அமைப்போம்" என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மேற்குவங்க காங்கிரஸும் INDIA கூட்டணியில் இடம்பெறவில்லை எனக் கூறிய அவர், "இந்தியக் கூட்டணியில் வங்க காங்கிரஸ் மற்றும் சிபிஐ(எம்) ஆகிய இரண்டும் எங்களுடன் இல்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் இருவரும் பாஜகவுடன் உள்ளார்கள். நான் டெல்லியைப் பற்றி பேசுகிறேன்" என்றார்.
4 கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 70 சதவிகித தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தை பொறுத்தவரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டை போன்றே, இந்த முறையும் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
ஆனால், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை போன்று மாபெரும் வெற்றியை பெற மம்தா முயற்சித்து வருகிறார்.