மகாராஷ்டிரா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தலானது, வரும் நவம்பர் மாதம் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கையானது நவம்பர் 23-ஆம் நடைபெறவுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த மகாராஷ்டிரா:
இந்திய நாட்டில் ஜிடிபியின் தரவரிசையில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு 288 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ளது, மகாராஷ்டிரா மாநிலம். இதனால், இங்கு நடைபெற உள்ள தேர்தலானது, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த தருணத்தில், மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்து வருகிறது.
ஒருபுறம் பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
அதற்கு எதிராக காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனாவும் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அங்கு கட்சிகளின் தேர்தல் பரப்புரையானது தீவிரமடைந்து வருகிறது.
காலால் உதைத்த பாஜக தலைவர்:
இந்த தருணத்தில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தன்வே, தனது காலால் பாஜக தொண்டரை உதைக்கும் காட்சியானது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையானது தீவிரமடைந்து வரும் நிலையில் , நேற்றைய தினம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள போகர்தானில், இச்சம்பவமானது நடந்ததாக கூறப்படுகிறது.
ஜல்னா சட்டமன்றத் தொகுதியில், சிவசேனா (ஷிண்டே பிரிவு) வேட்பாளரான அர்ஜுன் கோட்கர் போட்டியிடுகிறார். இவரை சந்திக்க பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தன்வே சென்றார். அப்போது, இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த தருணத்தில், புகைப்படம் எடுக்கும் போது, அருகில் இருந்த நபர், புகைப்பட தொகுப்புக்குள் நுழைய முன்றார், அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் தன்வே, அந்த நபரை காலால் எட்டி உதைத்தார். இந்த வீடியோ காட்சியானது வெளியாகி பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கண்டனங்கள்:
இதுகுறித்து பலர் தங்களது கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். பாஜக கூட்டணியினர், தேர்தலுக்கு முன்பே ஆணவப்போக்குடன் செயல்படுகின்றனர் என்றும், வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வார்கள் , எப்படி மக்களை மதிப்பார்கள் என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுவதை பார்க்க முடிகிறது.
மற்றொருவர் தெரிவித்ததாவது, பாஜகவின் மாநில தேர்தல் தலைவர் ராவ்சாகேப் தன்வே, ஆர்எஸ்எஸ் ஊழியரை உதைப்பதை காட்டும் வீடியோ, மாநிலம் முழுவதும் உள்ள பல பிஜேபி-ஆர் எஸ் எஸ் ஆதரவாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் நாளில் பாஜகவுக்கு தக்க பதிலை, மக்கள் தெரிவிப்பார்கள் என்றும் மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார்.