மேலும் அறிய
மதுரையில் அமைச்சர் மூர்த்தி உருவ பொம்மை எரிக்க முயற்சி.. சாதி வன்மத்துடன் பேசியதாக குற்றச்சாட்டு !
அமைச்சருக்கு எதிரான இந்தத் திடீர் போராட்டமும், உருவப்பொம்மை எரிப்புச் சம்பவமும் மதுரையில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மூர்த்தி உருவ பொம்மை
Source : whatsapp
அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி; சாதி வன்மத்துடன் பேசியதாக குற்றச்சாட்டு வைத்து சின்ன உடைப்பு கிராம மக்கள் ஆர்பாட்டம்.
விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரம்
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தங்களுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி நீண்ட நாட்களாகப் போராடி வரும் சின்ன உடைப்பு கிராம மக்கள், தற்போது தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்திக்கு எதிராகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நேற்று மதுரையில் நடைபெற்ற மக்கள் கருத்து குறிப்பு கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி அவர்களிடம் மனு அளிக்கச் சென்றபோது, அமைச்சர் மூர்த்தி தங்களை ஒருமையில் பேசி அவமதித்ததாகவும், சாதி வன்மத்துடன் நடந்து கொண்டதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகச் சின்ன உடைப்பு கிராமத்திலுள்ள வீடுகளைக் காலி செய்ய அதிகாரிகள் முற்பட்டபோது, கடந்த சில வாரங்களாகவே அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்களுக்கு மாற்று இடம் மற்றும் கூடுதல் இழப்பீடு வழங்காமல் வெளியேற மாட்டோம் என உறுதியாகக் கூறி வரும் நிலையில், நேற்றைய கூட்டத்தில் எம்.பி கனிமொழியிடம் முறையிடச் சென்றனர்.
சாதி ரீதியிலான வன்மத்தை வெளிப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு
அப்போது அங்கிருந்த அமைச்சர் மூர்த்தி, "இந்தக் கிராமத்தையே நான் தான் காப்பாற்றினேன்" என்று கூறியதாகவும், தங்களை மிகவும் ஒருமையில் பேசி, சாதி ரீதியிலான வன்மத்தை வெளிப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும் அமைச்சரை கண்டித்து, இன்று சின்ன உடைப்பு கிராமத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அமைச்சரின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மையை எரிக்க முயற்சித்தனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சருக்கு எதிரான இந்தத் திடீர் போராட்டமும், உருவப்பொம்மை எரிப்புச் சம்பவமும் மதுரையில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























